Last Updated : 23 Nov, 2020 09:48 AM

 

Published : 23 Nov 2020 09:48 AM
Last Updated : 23 Nov 2020 09:48 AM

தைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்: தமிழக பாஜக தலைவர் முருகன் வேண்டுகோள்

தைப்பூச நாளன்று அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரைக் கூட்டம் கோவை சிவானந்தா காலணியில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசியதாவது:

''வெற்றிவேல் யாத்திரை எதிர்க்கட்சிகளின் தூக்கத்தைத் தொலைத்துள்ளது. திட்டமிட்டபடி திருச்செந்தூரில் டிசம்பர் 5-ம் தேதி இந்த யாத்திரை நிறைவடையும். கந்தசஷ்டி கவசத்தை அவமதித்த கருப்பர் கூட்டத்துக்குப் பின்னால் திமுக இருக்கிறது. திமுகவும், ஊழலும் உடன்பிறப்புகள். காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக. வேறு மொழி கற்க வேண்டாம் என திமுகவினர் கூறுகின்றனர். திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் நாங்கள் வேற்று மொழி கற்பிக்க மாட்டேன் என அறிவித்து மாணவர் சேர்க்கையை நடத்த முடியுமா. நவீன தீண்டாமையை திமுக பின்பற்றி வருகிறது.

பக்ரீத், புனித வெள்ளி, கிறிஸ்துமஸ் போன்றவற்றுக்கு அரசு விடுமுறை அளிக்கின்றனர். அதேபோல, தைப்பூச நாளன்று அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும். திமுகவினர் தாங்கள் ஆட்சிக்கு வருவோம் என கனவு காண்கின்றனர். அந்த கனவு கனவாகவேதான் இருக்கப் போகிறது. பாஜக கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போகிறது''.

இவ்வாறு முருகன் பேசினார்.

கர்நாடக மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராயண் பேசும்போது, “திமுகவினர் இந்துகளுக்கு எதிராகவும், தமிழ் கலாச்சாரம், உணர்வுகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் உறவினர்களுக்காகத்தான் கட்சி நடத்தி வருகின்றனர். மக்களுக்காக அவர்கள் பாடுபடவில்லை. தமிழகத்தில் உள்ள ஊழல்வாதிகள், நாட்டுக்கு எதிராக செயல்படும் சக்திகளை அகற்ற பாஜக தொண்டர்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்" என்றார்.

பெண்களுக்கு மரியாதை

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் பேசும்போது, “மனுஸ்மிருதி பெண்களை அடிமைப்படுத்துகிறது என விசிக தலைவர் திருமாவளவன் கூறுகிறார். திமுக முன்னாள் அமைச்சரின் மகள் கட்சிக் கூட்டத்தில் தரையில் அமர்ந்து மன்றாடியுள்ளார். அதைப் பற்றி அவர் கேள்வி எழுப்பினாரா.

இந்தியாவில் பெண்களை மரியாதையாக நடத்தும் கட்சியாக பாஜக இருக்கிறது. தமிழகத்தில் பாஜகவுக்கு எம்.பி., எல்எல்ஏக்கள் இல்லை. ஆனாலும், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மத்திய நிதியமைச்சராக ஆக்கியிருக்கிறது பாஜக. அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்தவரை தெலுங்கானா ஆளுநராகவும் நியமித்துள்ளது. தமிழகத்தில் இந்து மதத்தை கொச்சைப்படுத்துபவர்கள் இனிமேலும் பழித்துப் பேசுவதை அனுமதிக்க முடியாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x