Published : 23 Nov 2020 03:11 AM
Last Updated : 23 Nov 2020 03:11 AM

கூட்டணி பற்றி கவலைப்படாதீர்கள்; தமிழகத்திலும் வெற்றி வியூகம் வகுப்போம்; வாக்குச்சாவடி அளவில் கட்சியை பலப்படுத்துங்கள்: பாஜக நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று டெல்லி திரும்பினார். லீலா பேலஸ் ஓட்டலில் இருந்து பாதுகாப்பு அணிவரிசையுடன் விமான நிலையத்துக்கு புறப்பட்ட அமித் ஷா.படம்: பு.க.பிரவீன்

சென்னை

கூட்டணி பற்றி கவலைப்படாமல் வாக்குச்சாவடி அளவில் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுமாறு தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கலைவாணர் அரங்கில் நடந்த தமிழக அரசு விழாவில் பங்கேற்றார். இதில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘அதிமுக - பாஜக வெற்றிக் கூட்டணி வரும் தேர்தல்களிலும் தொடரும்’’ என்றார். முதல்வர் பழனிசாமி பேசும்போது, ‘‘கடந்த மக்களவைத் தேர்தலின்போது அமைக்கப்பட்ட கூட்டணி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும்’’ என்று அறிவித்தார்.

அமித் ஷா பேசும்போது, "ஊழல்மற்றும் குடும்ப அரசியலுக்கு முடிவுகட்டுவோம். அதிமுக அரசுக்கு உறுதுணையாக இருப்போம்’’ என்றார். ஆனால், அதிமுக – பாஜககூட்டணி தொடரும் என்று வெளிப்படையாக அவர் அறிவிக்கவில்லை.

விழா முடிந்ததும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு திரும்பிய அமித் ஷாவை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் சந்தித்துப் பேசினர். 1 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது அமைச்சர் டி.ஜெயக்குமார், மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் உடனிருந்தனர். அப்போதும் அரசியல் பற்றியே அதிகம் பேசப்பட்டுள்ளது.

பாமக, தேமுதிக, தமாகா என்று பல கட்சிகள் கூட்டணியில் இருப்பதால் பாஜகவுக்கு 20 முதல் 25 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் கூறியுள்ளனர். ஆனால், 40 தொகுதிகள் வேண்டும் என்று கூறிய அமித் ஷா, சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகி வந்தால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாஜக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘திரைமறைவில் 30 ஆண்டுகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சசிகலா, சிறையில் இருந்துவெளியே வந்ததும் அமைதியாக இருப்பார் என்று நம்ப முடியாது.சசிகலா வருகைக்கு பிறகு அதிமுகவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை ஊகித்துதான் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அமித் ஷா வெளிப்படையாக அறிவிக்கவில்லை’’ என்றார்.

முதல்வரின் சந்திப்புக்கு பிறகு பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட பார்வையாளர்கள், மாநில அணித் தலைவர்களுடன் அமித் ஷா கலந்துரையாடினார். அப்போது பேசிய பலரும், ‘‘தமிழகத்தில் பாஜக வளர்வதை அதிமுக விரும்பவில்லை. கூட்டணி அமைத்தால் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் திட்டமிட்டு தோற்கடிப்பார்கள்" என்று கருத்து கூறியுள்ளனர்.

நிறைவாக பேசிய அமித் ஷா, ‘‘கூட்டணி பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.அதை கட்சித் தலைமை பார்த்துக்கொள்ளும். வாக்குச்சாவடி அளவில் கட்சியை பலப்படுத்துங்கள். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைந்தது 100 உறுப்பினர்களை சேருங்கள். 20 பேர் கொண்ட குழுவை அமையுங்கள். பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லாத மாநிலங்களில் கூட்டணி அமையும் வகையில் வியூகம் வகுத்து வெற்றிகண்டுள்ளோம். அதே வியூகத்தைதான் தமிழகத்திலும் வகுப்போம்" என்று கூறியதாக கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாவட்டத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து நடந்த பாஜக மாநில மையக்குழு கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்றார். இரவு 12 மணி வரை சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் தமிழக அரசியல் சூழல், அதிமுக அரசு மற்றும் கட்சியின் செயல்பாடுகள், வேல் யாத்திரைக்கு அதிமுக அரசு அனுமதி மறுத்தது, அதிமுக, திமுகவின் பலம், பலவீனங்கள், பாமக, தேமுதிக, தமாகா, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளுக்கு உள்ள வாக்கு வங்கி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் கோவை, சென்னை போன்ற பெரு நகரங்களில் பாஜகவின் வாக்குகளை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பிரித்ததை அமித் ஷாவிடம் கூறியுள்ளனர்.

குருமூர்த்தி சந்திப்பு

இக்கூட்டம் முடிந்ததும் அமித்ஷாவை ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி சந்தித்தார். ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர். அதிமுக உடனான கூட்டணி, கடந்த மக்களவைத் தேர்தல் போலவே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று குருமூர்த்தி கூறியதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை 8 மணி அளவில் ஆர்எஸ்எஸ் தமிழ்நாடு - கேரள மாநில அமைப்பாளர் செந்தில், செயலாளர் ராஜேந்திரன், தென் தமிழக அமைப்பாளர் ஆறுமுகம், செயலாளர் ஆடலரசன், வட தமிழக அமைப்பாளர் பி.எம்.ரவிக்குமார், செயலாளர் ஜெகதீசன், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தவத்சலன் ஆகியோர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினர். ‘‘அதிமுக ஆட்சியில் இந்துஅமைப்புகளுக்கு பல்வேறுநெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. சமூக ஊடகங்களில் இந்து மதத்தை இழிவுபடுத்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தமிழகத்தில் இந்து வாக்கு வங்கிஉருவாவதை அதிமுக விரும்பவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்குவராமல் தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது’’ என்று அவர்கள் கூறியதாக ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

அனைத்தையும் கேட்டுக் கொண்ட அமித் ஷா, "இந்த முறை சட்டப்பேரவையில் நுழைய வேண்டுமானால் வலுவான கூட்டணி அவசியம். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்ற லட்சியத்துடன் உழையுங்கள். கட்சித் தலைமை நல்ல முடிவை எடுக்கும்’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x