

முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் மீட்கப்பட்ட 2 புலிக் குட்டிகள், வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இன்று கொண்டுசெல்லப்படுகின்றன.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனக் கோட்டத்தில், சீமார்குழி பகுதியில் சுமார் 7 வயது மதிக்கத்தக்க பெண் புலியின் சடலம் மீட்கப்பட்டது. அதன் நகங்கள் மற்றும் பற்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதால், உயிரிழந்து பல நாட்கள் ஆகியிருக்கலாம் என வனத் துறையினர் தெரிவித்தனர். பெண் புலி உயிரிழந்து கிடந்த பகுதியில், அதன் 2 குட்டிகளை வனத் துறையினர் மீட்டனர்.
அவற்றை சென்னை வண்டலூர்உயிரியல் பூங்காவுக்கு கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “மீட்கப்பட்ட புலிக் குட்டிகளைப் பராமரிப்பது தொடர்பாக வனத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பிறந்து 20 நாட்களே ஆன நிலையில், அவற்றுக்கு அதிக கவனம் தேவைப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளைப் பராமரிக்கும் சிறப்பு மையம் இல்லை. எனவே, தேசிய புலிகள் ஆணையத்தின் வழிக்காட்டுதல்படி, 2 புலி குட்டிகளும் இன்று (நவ.23) வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன” என்றார்.