

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலூரில் கடலின் முகத்துவாரம் அருகே பாலாற்றின் குறுக்கே அணுமின் நிலைய நிர்வாகத்தின் நிதி உதவியுடன் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.32.50 கோடி செலவில் 5 அடி உயரம் கொண்ட தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. தடுப்புச்சுவர் கட்டப்பட்ட ஒருசில மாதங்களிலேயே, கனமழை பெய்து பாலாற்றில் நீரோட்டம் ஏற்பட்டதால் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி கடலில் கலந்தது. கடந்த 2019-ம் ஆண்டு 7 ஆயிரத்து 750 மில்லியன்கன அடி நீர் வீணாக கடலில் கலந்தது.
சமீபத்தில், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை பெய்தது. இதனால், வாயலூர் தடுப்பணை நிரம்பி மீண்டும் உபரிநீர் கடலில் கலந்து வருகிறது.
பாலாற்றின் குறுக்கே தடுப்புச்சுவர் அமைத்தும் கடந்த ஆண்டு 4 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலந்துள்ளது. இதனால், சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில்கொண்டு வாயலூர் தடுப்புச்சுவரை உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.300 கோடி செலவில் கதவணையுடன் கூடிய தடுப்பணையாக மாற்றியமைத்து, 4 டிஎம்சி நீரை பாலாற்றில் சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பாலாறு கீழ் வடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னைக்கு மாநகரின் குடிநீர் தேவைக்காக தடுப்புச்சுவரை கதவணையுடன் கூடிய தடுப்பணையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பாலாற்றின் குறுக்கே உள்ள ஈசிஆர் மேம்பாலத்தின் உயரத்தை கருத்தில் கொண்டு தடுப்பணையின் உயரம் அமையும். இதன்மூலம், 4 டிஎம்சி நீரை சேமிக்க முடியும்.
இந்த நீரை குழாய் மூலம் புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் சேமித்து, சென்னைக்கு 2 டிஎம்சி குடிநீர் வழங்க முடியும். இதற்காக, புறநகரில் உள்ள தையூர், கொளவாய் உள்ளிட்ட ஏரிகளின் கொள்ளளவை உயர்த்தவும் மற்றும் சிக்கராயபுரம், செட்டிபுண்ணியம் பகுதிகளில் உள்ள குவாரிகளின் நீர்நிலைகளை சீரமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். உலக வங்கியின் நிதி உதவியுடன் ரூ.300 கோடி செலவில் பணிகளை மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.