வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மூன்றாம்கட்ட மீனவர் பேச்சுவார்த்தை: இலங்கை சென்ற தமிழக மீனவர்கள் தகவல்

வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மூன்றாம்கட்ட மீனவர் பேச்சுவார்த்தை: இலங்கை சென்ற தமிழக மீனவர்கள் தகவல்
Updated on
1 min read

கொழும்பில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய- இலங்கை மீனவர்களுக்கு இடையேயான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான உடன்பாடும் எட்டாத நிலையில், மூன்றாம்கட்டப் பேச்சுவார்த்தை மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் நடைபெறும் என தமிழக மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தமிழக - இலங்கை மீனவர் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் திங்கள்கிழமை கொழும்பில் உள்ள ஹரிட்டாஸ் அரங்கத்தில், தமிழக மற்றும் இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் இரண்டாம்கட்டப் பேச்சுவார்த்தை, இருநாட்டு மீன்துறை அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடை பெற்றது.

இதில், தமிழக விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வாருதல் (trawling) மீன்பிடி மற்றும் இரட்டைமடி போன்ற மீன்பிடி முறை களை பயன்படுத்தி, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என இலங்கை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், இந்த மீன்பிடி முறையை மாற்றிக் கொள்ள மூன்று வருட காலம் அவகாசம் வேண்டும் அதே நேரம் இலங்கை கடற்பரப்பில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு பதிலாக 90 நாட்களாக குறைத்துக்கொள்கிறோம் என தமிழக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை இலங்கை பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.

மேலும், இலங்கையில் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் கடல் வளங்களை, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து அழித்து வாழ்வாதாரத்தை நாசமாக்குவதாகவும் குற்றம் சாட்டினர். அதே சமயம், பாரம்பரியமாக இருநாட்டு மீனவர்களும் மீன்பிடித்து வந்த கடற்பரப்பில், தாங்கள் தொழில் செய்யும் உரிமையை இலங்கை மீனவர்கள் மறுக்கக் கூடாது எனவும் தமிழக மீனவர்கள் வாதிட்டனர்.

மீனவர் பேச்சுவார்த்தை குறித்து நமது செய்தியாளரிடம் கொழும்பில் உள்ள தமிழக மீனவப் பிரதிநிதிகள் கூறியபோது, ‘‘கொழும்பில் நடைபெற்ற இரண்டாம்கட்ட மீனவப் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாட்டினை எட்ட முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து, மூன்றாம்கட்டப் பேச்சுவார்த்தை எங்கு, எப்போது நடக்கும் என்பது குறித்து 10 நாட்களுக்குள் அதாவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அறிவிக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in