

மதுரையில் உள்ள ஒரு ஜவுளிக் கடை குடோனில் நேற்று தீப்பற் றியது. தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மதுரையின் பல்வேறு பகுதிகளில் ‘சக்சஸ்’ என்ற பெயரில் ஆயத்த ஆடை துணிக் கடைகள் செயல்படுகின்றன. இவற்றின் உரிமையாளர் பாசில்.
இக்கடைகளுக்கான நிர்வாக அலுவலகம் தெற்குமாசி வீதியில் விளக்குத்தூண் அருகே உள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட இக் கட்டிடத்தில் அலுவலகம் தரைத் தளத்திலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிகளில் ஜவுளிக் கடை குடோனும் செயல்படுகிறது.
இக்கட்டிடத்தின் முதல் மாடி யில் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. இத்தகவல் கிடைத்ததும் பெரியார் பேருந்து நிலையம், அனுப்பானடி, தல்லாகுளம், மீனாட்சி அம்மன் கோயில் ஆகிய தீயணைப்பு நிலையங்களின் வீரர்கள் வாகனங் களுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். நிலைய அலுவலர்கள் உதயகுமார், வெங்கடேசன், சேகர், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர் கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
மேலும் தென் மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் சரவணக்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாணக்குமார், உதவி அலு வலர் சுப்ரமணியன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அலுவலகம் மிகக் குறுகிய சந்தில் அமைந்திருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் சுமார் 20 ஆண்டுகளுக் கான அலுவலக பைல்கள், லட்சக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள தையல் இயந்திரம் உட்பட உப கரணங்கள், துணி பண்டல்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து விளக்குத்தூண் போலீஸார் விசாரிக்கின்றனர்.
இந்த இடத்துக்கு அருகே உள்ள ஒரு ஜவுளிக் கடையில் தீபாவளியன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடம் இடிந்து இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். அதே நாளில் அதே பகுதியில் உள்ள ஒரு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக இப்பகுதியில் நேற்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.