தனியார் மருத்துவ கல்லூரியில் வாய்ப்பு கிடைத்தும் பண வசதியின்றி படிப்பை கைவிட்ட அரசு பள்ளி மாணவி: மீண்டும் வாய்ப்பு வழங்க முதல்வருக்கு வேண்டுகோள்

மதுரை உசிலம்பட்டி அருகே பானாமூப்பன்பட்டியைச் சேர்ந்த மாணவி தங்கப்பேச்சி (இடமிருந்து 2-வது) தனது குடும்பத்தினருடன்.
மதுரை உசிலம்பட்டி அருகே பானாமூப்பன்பட்டியைச் சேர்ந்த மாணவி தங்கப்பேச்சி (இடமிருந்து 2-வது) தனது குடும்பத்தினருடன்.
Updated on
1 min read

உசிலம்பட்டி அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்புக் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் விலகிவிட்டார். தற்போது அரசே செலவை ஏற்கும் என தெரிவித்துள்ளதால் தனக்கு மீண்டும் வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

உசிலம்பட்டி அருகே உள்ள பானாமூப்பன்பட்டியைச் சேர்ந்தவர் சன்னாசி. இவரது மனைவி மயில்தாய். இருவரும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு 4 மகள்கள். இதில் மூத்த மகள் தங்கப்பேச்சி. இவர் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். தேர்வு முடிவில் 427 மதிப்பெண் எடுத்தார். நீட் தேர்வில் 155 மதிப்பெண் பெற்றார். இவருக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைத்தது. அதற்கு ஒதுக்கீடு கட்டணமாக ரூ.25 ஆயிரத்தை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கல்வி, விடுதிக் கட்டணங்கள் உட்பட ரூ.4.25 லட்சம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. முதல் கட்ட தொகையான ரூ.25 ஆயிரத்தை செலுத்த பண வசதியில்லாததால் மருத்துவப் படிப்பு கை நழுவியதே என்ற கவலையில் மதுரைக்கு திரும்பினார். இதற்கிடையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனால் காத்திருப்புப் பட்டியலில் உள்ள தனக்கு வாய்ப்பு வழங்குமாறு அரசுக்கு மாணவி கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்த மாணவி தங்கப்பேச்சி கூறியதாவது:

கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரியில் வாய்ப்பு கிடைத்ததால் கட்டணம் செலுத்த முடியாமல் வாய்ப்பை நழுவ விட்டேன். தற்போது முதல்வரின் அறிவிப்பு எங்களைப் போன்ற ஏழைகளும் மருத்துவம் படிக்க வழிவகை செய்துள்ளது.

எனவே காத்திருப்புப் பட்டியலில் உள்ள எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு முதல்வரிடம் வேண்டுகிறேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in