

ஆம்பூரில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நகைக்கடை உரிமையாளரை கர்நாடகா காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச்சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே, விசாரணை முடிந்து நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மூங்கில் மண்டி தெருவைச் சேர்ந்தவர் நகைக்கடை அதிபர் விமல்சந்த்ஜெயின். இவரது மகன் திலீப்குமார் (51). இவர் நகை வியாபாரம் மட்டுமின்றி ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
இந்நிலையில், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுக்கொல்லை பகுதியில் திலீப்குமாருக்கு சொந்தமான நிலத்தை வாங்க ஆட்கள் தயாராக இருப்பதாக ஆம்பூரைச் சேர்ந்த இடைத்தரகர் ரத்தினம் போன் மூலம் திலீப்குமாருக்கு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, திலீப்குமார் தன் கார் ஓட்டுநர் சேகருடன் விண்ணமங்கலம் பகுதிக்கு நேற்று (நவ. 21) சென்றார்.
அங்கு நிலம் வாங்க வந்தவர்களுக்கு நிலத்தைக் காட்டிவிட்டு மீண்டும் தன் காரில் ஏற முயன்றபோது கர்நாடகா மாநில பதிவு எண்கொண்ட கார் ஒன்று அங்கு வந்தது. அதிலிருந்து இறங்கிய 5 பேர் திலீப்குமாரை வலுக்கட்டாயமாக அவர்கள் வந்த காரில் தூக்கிச்சென்றனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர் சேகர், உடனடியாக திலீப்குமார் குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், அவரது சகோதரர் மனோகர்லால் ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்தில், திலீப்குமாரை மர்ம நபர்களால் காரில் கடத்திச்சென்றதாக புகார் அளித்தார்.
அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். இதற்கிடையே, நள்ளிரவு 1 மணியளவில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட திலீப்குமார், கர்நாடகா காவல் துறையினரால் வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து, ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக, ஆம்பூர் காவல்துறையினர் தெரிவிக்கையில், "பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை வியாபாரி ஒருவரிடம் திலீப்குமார் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு 8 கிலோ எடையுள்ள தங்க நகைகள் மற்றும் வைரங்களை வியாபாரத்துக்காக வாங்கி வந்துள்ளார். ஆனால், அதற்கான பணத்தை திலீப்குமார் பெங்களூரு வியாபாரிக்குத் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இது குறித்து மெஜஸ்டிக் காவல் நிலையத்தில் பெங்களூரு நகை வியாபாரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார். அதன்பேரில், மெஜஸ்டிக் காவல் துறையினர் பல முறை விசாரணைக்கு அழைத்தும் திலீப்குமார் பெங்களூரு செல்லாமல் சாக்குப்போக்குக் காட்டி வந்துள்ளார்.
இதனால், பொறுமையிழந்த பெங்களூரு காவல் துறையினர் சீருடை அணியாமல் ஆம்பூருக்கு வந்து, திலீப்குமாரை விசாரணைக்காக வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று, பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்தில் வைத்து 6 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
பிறகு, பெங்களூரு வியாபாரியிடம் வாங்கிய தங்கம் மற்றும் வைரங்களுக்கு உரிய பணத்தை விரைவில் கொடுத்து விடுவதாக திலீப்குமார் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்த பிறகு, அவரை பெங்களூரு காவல் துறையினர் விடுவித்து, வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுச்சென்றது விசாரணையில் தெரியவந்ததது" என தெரிவித்தனர்.