

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல்கள் நடைபெறாத காரணத்தால், மாநகராட்சி மேயர், நகர மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு அதிமுகவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வேண்டி விருப்ப மனு அளித்திருந்த அதிமுகவினர் 23.11.2020 முதல் 15.12.2020 வரை விண்ணப்பக் கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என, அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அதிமுக தலைமைக்கழகம் இன்று (நவ. 22) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
"உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற இருந்த நிலையில், உள்ளாட்சிப் பதவிகளுக்கு அதிமுகவின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கோரிய அதிமுகவினரிடமிருந்து 15.11.2019 முதல் டிசம்பர் மாதம் 2019 வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல்கள் நடைபெறாத காரணத்தால், மாநகராட்சி மேயர், நகர மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு அதிமுகவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வேண்டி விருப்ப மனு அளித்திருந்த அதிமுகவினர் அனைவரும், தாங்கள் செலுத்தி இருக்கும் விண்ணப்பக் கட்டணத் தொகைகளை தலைமைக் கழகத்தில் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என, கடந்த 21.11.2019 அன்று அறிவிப்பு வெளியிட்டதன் பேரில். பலர் தாங்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணத் தொகைகளை பெற்றுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், மேற்கண்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்து, விண்ணப்பக் கட்டணத் தொகையை திரும்பப் பெறாத அதிமுகவினருக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கிடும் வகையில், அவர்கள் அனைவரும் வருகின்ற 23.11.2020 முதல் 15.12.2020 வரை தாங்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணத் தொகைக்கான அசல் ரசீதுடன் தலைமைக் கழகத்திற்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்பதையும், இந்தக் காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இனை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.