

தனது பிரச்சாரப் பயணத்தின் வழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், அங்கு ஆன்மிக நூல் வெளியீட்டில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் ஆதீன கர்த்தர் கொடுத்த திருநீறும் அணிந்து பயபக்தியுடன் வழிபட்டார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை நேற்று முன்தினம் (நவ. 20) திருக்குவளையில் தொடங்கினார். அவரது பயணம் திட்டமிட்டபடி நடைபெறாமல் ஒவ்வொரு நாளும் பிரச்சார பயணம் தொடங்கியதும் கைது செய்யப்பட்டு வருகிறார். அதன்படி நேற்று (நவ. 21) காலை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் கைது செய்யப்பட்ட அவர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டார்.
விடுவிக்கப்பட்ட வேகத்தில் மயிலாடுதுறை நோக்கி வந்த உதயநிதி வழியில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்திற்கு நேற்றிரவு சென்றார். அங்கு அவரை வரவேற்று பொன்னாடையும், சந்தன மாலையும் அணிவித்த குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஆசி கூறி திருநீறு வழங்கினார். அதனை நெற்றியில் பூசிக் கொண்டார் உதயநிதி.
இதனையடுத்து, திமுகவைச் சேர்ந்தவரும் மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவருமான ராம.சேயோன் தலைமையில் இயங்கும் ஆன்மிக பேரவையின் சார்பில் 'தமிழ் கடவுள் சேயோன்' என்ற நூல் வெளியீட்டு விழாவும் அங்கு நடைபெற்றது. ஆதீனகர்த்தர் நூலை வெளியிட அதனை உதயநிதி பெற்றுக் கொண்டார்.
கந்த சஷ்டி கவசம் அவமதிக்கப்பட்டதாக திமுகவின் மீது சுமத்தப்பட்ட பழிக்கு பதிலடியாகத் தான் இந்நிகழ்வு நடைபெற்றதாக திமுகவினர் சொல்கிறார்கள். கந்தன் மீது பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி உள்ளிட்ட பாமாலைகளை தொகுத்து வெளியிடப்பட்ட இந்நூலை உதயநிதி பெற்றுக் கொண்டது தாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை என்பதை வெளிக்காட்டும் முயற்சிதான் என்கிறார்கள் திமுகவினர்.
இந்நிகழ்வில், மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராம.சேயோன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன், மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையபெருமாள், தருமபுர ஆதீன கலைக் கல்லூரி செயலாளர் செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வுக்கு முன்னதாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த போது வேளாங்கண்ணி பேராலய அதிபருடனும் காணொலி காட்சி மூலம் உதயநிதி கலந்துரையாடினார். ஆதீன நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மயிலாடுதுறைக்கு வந்த உதயநிதி, அங்கு தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்லூரி மாணவிகள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். அதில் மாணவிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த உதயநிதியுடன் போட்டி போட்டுக்கொண்டு மாணவிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
மூன்றாவது நாளாக இன்றும் மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் தனது பிரச்சார பயணத்தை உதயநிதி மேற்கொள்கிறார்.