Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

அதி கனமழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்; நிவாரண முகாம்களில் உணவு, மருத்துவ ஏற்பாடுகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

கனமழை, அதி கனமழை எதுவானாலும் எதிர்கொள்ள அரசு தயாராகஉள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாகவானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 36மாவட்டங்கள், சென்னை பெருநகரமாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, மதுரை, கோவை, விருதுநகர் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு அந்த மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தி வருகிறோம்.

தமிழகத்தில் உள்ள 14,144 பாசனஏரிகளில் 1,069 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் 21.25 அடிநீர் இருப்பு உள்ளது. மணிமங்கலம் உள்ளிட்ட துணை ஏரிகளில் 80 சதவீத அளவுக்கு மட்டுமே நீர் உள்ளது. உபரி நீரை வெளியேற்றினால் ஆபத்து ஏற்படும் என்று சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை.

கடந்த மழைக்காலங்களில் சென்னை மாநகராட்சி பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அது தற்போது குறைந்து 100 இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இதை 10-க்கும் கீழ் குறைக்க உள்ளாட்சித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இடி, மின்னல் தாக்கும் நேரத்தில் வெளியே செல்வது, பழைய கட்டிடங்களின் அருகே செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். விருதுநகரில் 3 சிறுவர்கள் குட்டையில்குளிக்கச் சென்று உயிரிழந்துள்ளனர். ஏரி, குளங்கள், ஓடைகள் உள்ளபகுதிகளில் குழந்தைகள் விளையாடாமல் பெற்றோர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தாழ்வான பகுதியில் வசிப்போரை நிவாரண முகாமில் தங்கவைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அங்கு உணவு, மருத்துவ ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளன. கன மழை, அதி கனமழை எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x