Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

பேரறிவாளன் விடுதலையில் சிபிஐக்கு சம்பந்தம் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

புதுடெல்லி

பேரறிவாளன் விடுதலைக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும்பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிஉச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தமிழக ஆளுநரிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

நீதிபதிகள் அதிருப்தி

மேலும், இதுதொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்தபோது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உள்ள சர்வதேச தொடர்புகள் குறித்து பன்னோக்கு விசாரணை ஆணையம் மற்றும் சிபிஐ விசாரணை நடத்தி வருவதால் அந்த விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, நிலோபர் நிஷா வழக்கில் உச்ச நீதிமன்றம் தனக்குள்ள பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி, சிறையில் இருந்தவர்களை விடுதலை செய்ததுபோல தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் கோரப்பட்டு இருந்தது.

நாளை விசாரணை

இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை (நவ.23) விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோருவதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பேரறிவாளன் விடுதலை விவகாரம் அவருக்கும், ஆளுநருக்கும் இடையிலானது. இதுதொடர்பாக ஆளுநர்தான் முடிவு எடுக்க முடியும். சிபிஐக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த பங்கும் இல்லை. பெல்ட் வெடிகுண்டு தொடர்பான விசாரணை உள்ளிட்ட எங்களின் இறுதி அறிக்கையை யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் போதும். மேலும் இதுதொடர்பாக விளக்கம் கோரி தமிழக ஆளுநரிடம் இருந்து எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை. எனவே இந்த விவகாரத்தில் சிபிஐ தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ இவ்வாறு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருப்பது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x