

வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வரும் பக்தர்கள், தாங்கள் கொண்டு வரும் உடைமைகளை பாதுகாப்பாக வைக்க பொருட்கள் வைப்பு அறை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் உள்ள மலைமீது வேதகிரீஸ்வரர் கோயில்அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் பக்தவச்சலேஸ்வரர் எழுந்தருளியுள்ள தாழக்கோயிலும் உள்ளது.
மலைக்கோயிலில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும், மலை மீது பல்லவ மன்னர்களால் உருவாக்கப்பட்ட குடவரை கோயிலும் உள்ளதால் இவற்றை கண்டு ரசிக்கவும் சுவாமி தரிசனம் செய்வதற்காகவும் வடமாநிலங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பவுர்ணமி நாட்களில் மலைக்கோயிலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமியை வணங்கிச் செல்கின்றனர். ஆனால்,பக்தர்கள் தங்களுடன் கொண்டுவரும் உடைமைகள் மற்றும் வாகனங்களில் வருவோரின் தலைக்கவசத்தை கையில் பிடித்தவாறு, பல்வேறு சிரமங்களுடன் கிரிவலம்வரும் நிலை உள்ளது. இதனால், பக்தர்களின் வசதிக்காக மலையடிவாரத்தில் பொருட்கள் வைப்பு அறை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் வேலன் கூறும்போது, "திருவண்ணாமலை கோயிலுக்கு நிகராக இங்கும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். ஆனால், கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கான குடிநீர், கழிப்பறை மற்றும் வெளியூர் பக்தர்கள் தங்கிச் செல்வதற்கான விடுதிகள் போன்ற வசதிகள் இல்லை.
இந்நிலையில், கிரிவலம் வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் பொருட்களை கையில் சுமந்துகொண்டு மலையை வலம்வரும் நிலை உள்ளது. இதனால், மலைஅடிவாரத்தில் பொருட்கள் வைப்பு அறை அமைத்தால் பக்தர்கள் பொருட்களை பாதுகாப்பாக வைக்க முடியும். கிரிவலப் பாதையில் கோயில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட விடுதி அறைகளை புதுப்பித்து சீரமைத்தால், வெளியூர் பக்தர்கள் தங்கிச் செல்வர்" என்றார்.
இதுகுறித்து, வேதகிரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் குமரன் கூறும்போது, "கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக மலையடிவாரத்தில் பொருட்கள் வைப்பு அறை அமைப்பது தொடர்பாக, உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.