

வங்கக் கடலில் காற்று மேல் அடுக்கு சுழற்சி உருவாகி யிருப்பதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானி லை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை கடற்கரையை யொட்டி காற்று மேல் அடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் ஆங் காங்கே ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தமான் கடல் பகுதியிலும் காற்று மேல் அடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு ஆங்காங்கே மழை பெய்யலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் 25-ம் தேதிக்கு பிறகு தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 27-ம் தேதிக்கு மேல் மழை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தற்போது உருவாகியுள்ள காற்று மேல் அடுக்கு சுழற்சி வலுவடைந்து பருவமழை தொடங்குவதற்கு காரணமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட கிழக்கு பருவமழை அக்டோபர் 20 முதல் 23-ம் தேதி வாக்கில் வழக்கமாக தொடங்கும். பிலிப்பைன்ஸில் உருவான சூறாவளி மற்றும் சில காரணங்களால் இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்குகிறது. தமிழகத்தில் கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் 8 செ.மீ., கன்னியா குமரி மாவட்டம் மயிலாடியில் 5 செ.மீ., நீலகிரி மாவட்டம் குன்னூரில் 4 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 3 செ.மீ. மழை நேற்று முன் தினம் பதிவாகியுள்ளது.