உங்கள் சாதனை பற்றிப் பொதுமேடையில் விவாதிக்கத் தயாரா?- ஆம்ஆத்மி மாநிலப் பொறுப்பாளர் ஆளுநர் கிரண்பேடிக்கு சவால் 

உங்கள் சாதனை பற்றிப் பொதுமேடையில் விவாதிக்கத் தயாரா?- ஆம்ஆத்மி மாநிலப் பொறுப்பாளர் ஆளுநர் கிரண்பேடிக்கு சவால் 
Updated on
1 min read

பொது மேடையில் தனது சாதனை பற்றி விவாதிக்கத் தயாரா என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு, ஆம் ஆத்மியின் மாநிலப் பொறுப்பாளர் சோம்நாத் பாரதி சவால் விடுத்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரி மாநில ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளரும் டெல்லி எம்எல்ஏவுமான சோம்நாத் பாரதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''புதுச்சேரி துணைநிலை ஆளுநராகக் கிரண்பேடி பதவியேற்று நாலரை ஆண்டுகளாகின்றன. அவர் பதவியேற்கும் முன்பு இருந்ததை விட தற்போது புதுச்சேரி பொருளாதாரம் தொடங்கி அனைத்துத் துறைகளும் சீர்கெட்டுள்ளன.

எதற்கு எடுத்தாலும் மாநில அரசைக் குற்றம் சொல்லி, அன்றாட அலுவல்களில் கிரண்பேடி தலையிடுவதால் தற்போதைய சீர்கேட்டுக்கு அவர் நிச்சயம் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆளுநர் என்ற முறையில் மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரிக்கு எவ்விதமான புதிய திட்டங்களையும் இதுவரை கிரண்பேடி எடுத்து வரவில்லை.

அன்றாட நிர்வாகத்தில் தலையிட்டு இரட்டைத் தலைமையை உருவாக்கி புதுச்சேரி வளர்ச்சிக்குக் கிரண்பேடி தடையாக இருப்பதாக மாநில அரசு குற்றம் சாட்டுகிறது. மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் கிரண்பேடி, மக்கள் நலன் கருதி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விடுவது நல்லது. அதை மறுக்கும் பட்சத்தில் தனது சாதனை பற்றிப் பொதுமேடையில் விவாதிக்கத் தயாரா என்ற கேள்வியை எழுப்புகிறோம்.

நீங்கள் சொல்லும் இடத்தில், நீங்கள் சொல்லும் நேரத்தில் உங்களுடன் விவாதிக்க நாங்கள் தயார். சவாலை ஏற்க நீங்கள் தயாரா?''

இவ்வாறு சோம்நாத் பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in