

நாகர்கோவில் அருகே கருப்புக்கோடு குளத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்செரிக்கையாக வெள்ள அபாய ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கையை மாவட்டம் தோறும் ஏற்படுத்த தீயணைப்பு துறை டிஜிபி ஜாபர்சேட் வலியுறுத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அதற்கான முன்னற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தீயணைப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாகர்கோவிலை அடுத்த சுங்காங்கடை அருகே கருப்புக்கோடு குளத்தில் வெள்ள அபாய போலி ஒத்திகை பயிற்சி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.
பயிற்சியின்போது குளத்திற்குள் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்டு கரைசேர்த்து மருத்துவர் உதவியுடன் முதலுதவி சிகிச்சை அளிப்பது, பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல் போன்ற பயிற்சி ஒத்திகையை தீயணைப்பு வீரர்கள தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.
மேலும் மழை வெள்ளத்தில் சிக்கியவர்கள் காஸ் சிலிண்டர், வாகன டயர் டியூப், பயனற்ற தண்ணீர் பாட்டில்கள், வாழைத்தண்டு, கேன்கள், பிளாஸ்டிக் குடம், தேங்காய் கதம்பை போன்றவற்றை பயன்படுத்தி தங்களை எவ்வாறு காப்பாற்றி கொள்வது எனவும் தீயணைப்பு வீரர்கள் பயிற்சி ஒத்திகையில் நடித்து காட்டினர்.
மேலும் ரப்பர் படகு மூலம் வயதானவர்கள், பெண்கள், கால்நடைகளை காப்பாற்றுவது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடுவோருக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது எனவும் பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்குளம் வட்டாட்சியர் ஜெகதா, வருவாய் ஆய்வாளர்கள் சேவியர், அருள்சேகர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். வெள்ள அபாய ஒத்திகையை கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலர் சரவணபாபு தலைமையில் நிலைய அலுவலர்கள் துரை, ராஜா, மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி காண்பித்தனர்.