Last Updated : 21 Nov, 2020 04:37 PM

 

Published : 21 Nov 2020 04:37 PM
Last Updated : 21 Nov 2020 04:37 PM

குமரி கடற்கரைப் பகுதிகளில் உலக மீனவர் தினம் கொண்டாட்டம்: கடல் அன்னைக்கு நன்றி தெரிவித்து மீனவர்கள் நெகிழ்ச்சி

கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகளில் இன்று உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. கடல் அன்னைக்கு நன்றி தெரிவித்து மீனவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

ஆண்டு தோறும் நவம்பர் 21ம் தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான மீனவ கிராமங்களில் மீனவர் தினம் இன்று கொண்டாடப்பட்டது. குளச்சல் கடற்கரையில் தெற்காசிய மீனவர் தோழமை பொதுசெயலாளர் சர்ச்சில் தலைமையில் மீன்பிடி உபகரணங்களுக்கு அர்ச்சிப்பு செய்து பிரார்த்தனை நடந்தது. பின்னர் மீனவர்கள், குழந்தைகள் மீனவ குடும்பத்தினர் கூடி கடலுக்கும், மீன்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி நெகிழ்ச்சியடைந்தனர்.

கடற்கரையில் மீனவர்கள் கேக் வெட்டி மீனவர் தின மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் மீனவர்களின் உடல் உழைப்பையும், தைரியத்தையும் வெளிப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. மீனவர்கள் கடலிலும், கரைப்பகுதியிலும் தொடர்ந்து சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டி கோரிக்கைகளை மீனவர்கள் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தனர்.

இதைப்போல் மணக்குடி மீனவ கிராமத்தில் உள்ள ஆலயத்தில் மீனவர் தின சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கடற்கரையில் நின்ற படகுகளுக்கு அர்ச்சிப்பு செய்யப்பட்டது. கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கடலோர பாதுகாப்பு குழுமம், மீன்வளத்துறை, கன்னியாகுமரி பேரூராட்சி சார்பில் தூய்மை பணி நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் உலக மீனவர் தினவிழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மேலும் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்ல மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மீனவ மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் மனு அளித்தனர். மீனவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x