

அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கவுள்ள மாணவிக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி செய்வதாக ஆலங்குடி தொகுதி திமுக எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன் உறுதியளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.காயத்ரி. இவர், மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவருக்கு, அரசு ஒதுக்கீட்டில் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க சீட் கிடைத்துள்ளது.
இவரது பெற்றோர் நிலமற்ற கூலித் தொழிலாளர்கள். கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். கல்லூரி நிர்வாகம் கேட்கும் தொகையை திரட்டி உரிய காலத்தில் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக மாணவியின் பெற்றோர், பலரிடமும் புலம்பி வந்துள்ளனர்.
இது குறித்து, தகவல் அறிந்த ஆலங்குடி தொகுதி திமுக எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன், மாணவியின் வீட்டுக்கு இன்று (நவ. 21) நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து, பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
அப்போது, "கல்விக் கட்டணம் உட்பட பல்வேறு கட்டணமாக ரூ.7 லட்சத்தை ஒரு வாரத்துக்குள் செலுத்துமாறு கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கான வசதி ஏதும் எங்களிடம் இல்லை" என மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இதையடுத்து, முதல் ஆண்டுக்கான அனைத்து தொகையையும் உரிய காலத்தில் கல்லூரியில் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்ததோடு, தனது பங்காக ரூ.25 ஆயிரம் தருவதாக எம்எல்ஏ மெய்யநாதன் உறுதி அளித்தார்.
இந்த சூழலில், இதுபோன்ற தனியார் கல்லூரிகளை தேர்வு செய்துள்ள மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய மாணவர்களின் கல்விக்கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.