

திமுக தலைமைக்கு எதிரான கருத்துகளை கூறியதாக, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று பாஜகவில் இணைந்தார்.
மாநிலங்களவை திமுக முன்னாள் உறுப்பினராகவும் அக்கட்சியின் விவசாய அணி செயலாளராகவும் இருந்தவர் கே.பி.ராமலிங்கம். இவர், மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக கையாண்டு வருவதாகவும், 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனவும் கருத்து தெரிவித்தார். இதனால், கட்சித் தலைமைக்கு எதிரான கருத்துகளை கூறியதாக, கடந்த ஏப். மாதம் கே.பி.ராமலிங்கம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, இன்று (நவ. 21) காலை 11 மணியளவில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து கே.பி.ராமலிங்கத்திற்கு அடிப்படை உறுப்பினர் அட்டையை தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி வழங்கினார்.
இன்று மதியம் தமிழகம் வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கேபி.ராமலிங்கம் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.