அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம்; எந்த விதிமீறலும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
2 min read

அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் எந்த விதிமீறலும் இல்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தமிழகத்தில், கலை அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வு தவிர பிற பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, அரியர் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

அரியர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தமிழக அரசின் தேர்ச்சி உத்தரவை ரத்து செய்ய கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கின் விசாரணையின் போது, அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது என பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

பல்கலைக்கழக மானியக் குழு தாக்கல் செய்திருந்த பதில் மனுவில் அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் சார்பில் இன்று (நவ. 21) பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அந்த பதில் மனுவில் கரோனா பாதிப்பின் காரணமாக மாணவர் சமுதாயமே எதிர்பாராத வகையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கும் மாணவர்கள் ஆளாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் இந்த அனைத்துக் கல்லூரிகளும் மூடப்பட்டு விடுதிகள் காலி செய்யப்பட்டு, சொந்த ஊருக்குத் திரும்ப அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான மாணவர்கள் விடுதிகளிலேயே தங்களுடைய புத்தகங்கள்,நோட்டுகள், மடிக்கணினி உள்ளிட்ட அனைத்தையும் விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும், தற்போது வரை ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வருவதாகவும் கூறியுள்ளார். கல்லூரிகளும் கோவிட் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் அனைத்து பல்கலைக்கழகங்களுடன் கலந்தாலோசித்து குழு அமைக்கப்பட்டு, அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதாக பதில் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் எந்த ஒரு விதிமுறை மீறலும் கிடையாது என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர், மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், மாணவர்களுக்கு சரிசமமான குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படும் என்றும் திருப்தி அடையாத மாணவர்கள் வரும் தேர்வுகளை எழுதி தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு முரணாக எந்த உத்தரவும் இல்லை என்றும் மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைகள் என்பது ஒரு அறிவுரையின் அடிப்படையிலேயே உள்ளதாகவும் எனவே, அதன் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் சொந்தமாக திட்டத்தை வகுத்துக் கொள்ள முடியும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது எந்த வகையிலும் மாணவரின் எதிர்காலத்தை பாதிக்காது என்றும் மேலும் அரசின் இந்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவது ஆகாது என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் உள்ளதால் தான் இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .எனவே, இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in