

உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து விருதுநகர், ராஜாபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட எம்.பி. உட்பட திமுகவினர் 72 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர்.
திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நேற்று உதயநிதி ஸ்டாலினனை கைது செய்து காவல் துறையினர் விடுதலை செய்தனர்.
தொடர்ந்து இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவர்களை சந்தித்து 2-வது நாளாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது போலீசார் அவரைக் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து விருதுநகர் எம்.ஜி.ஆர். சிலை அருகே திமுக வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும், காவல்துறைக்கு எதிராகவும் திமுகவினர் கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்ட திமுக நகர செயலாளர் தனபாலன் உள்பட 32 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இதேபோன்று, ராஜபாளையம் காந்திசிலை அருகே திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரச் செயலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மறியலில் தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ்குமார் உள்பட திமுகவினர் பலர் பங்கேற்றனர்.
அதையடுத்து, மறியலில் ஈடுபட்ட எம்.பி. தனுஷ்குமார் உள்ளிட்ட 40 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.