Published : 21 Nov 2020 02:38 PM
Last Updated : 21 Nov 2020 02:38 PM

சென்னை வந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா: முதல்வர், துணை முதல்வர் வரவேற்பு

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தார். அவரை முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் வரவேற்றனர். சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கும் அவர் கட்சிதலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் ஒரு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தார். சிறப்பு விமானம் மூலம் மதியம் 1.40-க்கு அவர் சென்னை வந்தடைந்தார். அவரை வரவேற்க வழி நெடுகிலும் பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளனர். சென்னை விமான நிலையம் வந்த அவரை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், தமிழக அமைச்சர்கள், பாஜக தலைவர் எல்.முருகன், சி.டி.ரவி, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்திலிருந்து ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஹோட்டல் லீலா பேலசில் தங்குவதற்காக சென்றார். வழியில் இருபுறமும் பாஜக தொண்டர்கள் நிற்பதைப் பார்த்த அவர் காரைவிட்டு இறங்கி சிறிது தூரம் நடந்துச் சென்றார். அவருக்கு தொண்டர்கள் உற்சாகத்துடன் கை அசைத்தனர். சில இடங்களில் அதிமுக தொண்டர்களும் கட்சிக்கொடியுடன் நின்று அமித்ஷாவுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்பு கொடுத்தனர். அமித் ஷாவின் சென்னை வருகைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்காக 4 இணை ஆணையர்கள், 10 துணை ஆணையர்கள் தலைமையில் 2000 போலீஸார் கொண்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் வந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் சென்றன.

மதியம் ஹோட்டலுக்கு செல்லும் அமித் ஷா மாலை 4-00 மணி வரை முக்கிய விருந்தினர்களை சந்திக்கிறார். பின்னர் 4.15 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விழாவில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டம் உள்ளிட்ட ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

கரூர் நஞ்சை புகலூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்தை தொடங்கி வைக்கும் அவர், கோவை-அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலை திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் 6-30 மணிக்கு மீண்டும் ஓட்டலுக்கு திரும்பும் அவர், அங்கு பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் 2021 தேர்தல் குறித்த முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. இடையில் அதிமுக தலைவர்கள் சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இரவு தங்கும் அவர் நாளைக் காலை சென்னையிலிருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார். அமித் ஷா பயணம் அரசுமுறையாக இருந்தாலும், தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ள சிக்கல்களை களையவும், பாஜகவுக்கான இடங்கள் குறித்து ஆலோசிக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x