தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்; கல்விக்கட்டணத்தை ஏற்ற திமுக: கி.வீரமணி வரவேற்பு

கி.வீரமணி: கோப்புப்படம்
கி.வீரமணி: கோப்புப்படம்
Updated on
1 min read

தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார்.

தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 21) அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:

"அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு காரணமாக 405 மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சி நீடிக்க முடியாத ஓர் அவலநிலை ஏற்பட்டது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்குக் குறைந்த கட்டணம், தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க் கட்டணம் என்ற நிலையில்,
அரசுப் பள்ளிகளில் படித்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள பெரும்பாலான மாணவர்கள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவ்வளவுத் தொகையைக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

கண்ணீரும், கம்பலையுமாக அந்த மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கூறியதை தொலைக்காட்சிகளில் பார்த்த அனைவரும் கண்ணீர் விடாத குறைதான். இடங்கள் கிடைத்தும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டது.

இது குறித்து, நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டோம், இந்த ஏழை மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என்று அவ்வறிக்கை வாயிலாகக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், அந்த ஏழை மாணவ, மாணவிகளுக்கான கட்டணத் தொகையை திமுக ஏற்கும் என்று அறிவித்திருப்பது, போற்றி வரவேற்கத்தக்கது; சமூகநீதியில் திமுகவுக்கு இருக்கும் அபரிமிதமான அக்கறையையும், ஈடுபாட்டையும் வெளிப்படுத்தக்கூடிய ஆக்கப்பூர்வமான காலத்தால் அறிவிக்கப்பட்டுள்ள காலாகாலமும் நின்று பெருமையுடன் பேசப்படக்கூடிய சீரிய முடிவாகும். உள்ளந்திறந்து பாராட்டுகிறோம்; பாராட்டுகிறோம்!
வரவேற்கிறோம்!".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in