

நாகப்பட்டினத்தில் இன்று கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்யக் கோரி காரைக்காலில் திமுகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் இரண்டாவது நாளாக இன்று (நவ. 21) நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
நாகையிலிருந்து மயிலாடுதுறை மாவட்டப் பகுதிக்குச் செல்லும் வழியில், புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் ஒரு சில நிகழ்வுகளில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் வகையில் திமுகவினரால் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை பகுதியில் மீனவர்களிடயே பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் காரைக்கால் அரசலாற்று பாலம் அருகே காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.ஹெச் நாஜிம் தலைமையில், புதுச்சேரி மாநில தெற்கு அமைப்பாளர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சிவா, வடக்கு அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சிவக்குமார் மற்றும் திமுகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதே போல காரைக்கால் திமுக மருத்துவரணி அமைப்பாளர் வி.விக்னேஸ்வரன் தலைமையில் கோட்டுச்சேரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டோரையும் போலீஸார் கைது செய்தனர்.