Published : 21 Nov 2020 01:03 PM
Last Updated : 21 Nov 2020 01:03 PM

யானைகள் ஆய்வாளர் அஜய் தேசாய் மறைவு; முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் இரங்கல்

அஜய் தேசாய்: கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தின் முதுமலை காடுகளில் யானைகள் பற்றி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டவரும் இந்தியாவின் முக்கிய யானைகள் ஆய்வாளருமான அஜய் தேசாய் நேற்று (நவ. 20) இரவு கர்நாடகாவின் பெலகாவியில் காலமானார். அவருக்கு வயது 63. அஜய் தேசாய் மறைவுக்கு சூற்றுச்சூழல் ஆர்வலர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பிரபல யானைகள் ஆர்வலரும், ஆராய்ச்சியாளருமான அஜய் தேசாய் உடல் நலக் குறைவால் நேற்று காலமானார் என்ற செய்தி அறிந்து நான் வேதனை அடைந்தேன்.

அஜய் தேசாய் சர்வதேச உலக இயற்கை நிதியத்தின் ஆலோசகராகவும், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றிய அமைப்பின் ஆலோசகராகவும், ஆசிய யானைகள் தொடர்பான மத்திய அரசின் சிறப்பு குழு உறுப்பினராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். இவர் யானைகள் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜய் தேசாய் தமிழ்நாட்டின் முதுமலை சரணாலயம் மற்றும் களக்காடு, முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் ஆகிய பகுதிகளில் யானைகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ளார். மேலும், இவர் யானைகள் குறித்த தகவல்களையும், ஆலோசனைகளையும் தமிழ்நாடு வனத்துறைக்கு வழங்கியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மு.க.ஸ்டாலின், தலைவர், திமுக

யானைகள் ஆர்வலர் அஜய் தேசாய் மறைவெய்திய செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். மிகச் சிறந்த வன உயிரியல் பாதுகாப்பு நிபுணரை இந்தியா இழந்திருக்கிறது. அஜய் தேசாயை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சூழலியல் ஆர்வலர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்!

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x