Published : 21 Nov 2020 12:31 PM
Last Updated : 21 Nov 2020 12:31 PM

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த முகாம்: தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் நடக்கிறது

தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக வாக்காளர் விவரங்கள், வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட மாற்றங்கள் செய்ய தமிழகம் முழுவதும் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. வாக்காளர்கள் அதைப் பயன்படுத்தி திருத்தம் மேற்கொள்ளலாம்.

நவ.16 அன்று அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பெரும்பாலும் பள்ளிக் கட்டிடங்களில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள்) வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியல்கள் elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத் தேர்தல் அதிகாரிகளால் வாக்காளர் பட்டியலின் நகல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்படும்.

மொத்த வாக்காளர்கள் முழு விவரம்

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2021-ன் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 01 லட்சத்து 12 ஆயிரத்து 370. பெண் வாக்காளர்கள் 3 கோடியே, 09 லட்சத்து 25 ஆயிரத்து 603. மூன்றாம் பாலின வாக்காளர்கள் 6,385.
இன்றும் நாளையும் சுருக்கமுறை திருத்தம்

நவ.21, 22 - இரண்டு நாள் சிறப்பு முகாம்

நவ.21, 22 இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சுருக்கமுறை திருத்தம் நடக்கிறது. இது தவிர டிச.12 மற்றும் 13 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பொதுவாக, வாக்குச் சாவடிகள்) சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/ நீக்கல்/ திருத்தல்/ இடமாற்றம் ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்த நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம்.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021-ன்போது கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் அளிக்க அனுமதிக்கப்பட்ட நவ.16 முதல் டிச.15 வரை உள்ள காலத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் / திருத்தங்கள்/ இடமாற்றம் செய்யவோ விரும்பும் வாக்காளர் அல்லது தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 7, 8 அல்லது 8 ஏ ஆகியவற்றைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்டவாறு அளிக்கலாம்:

யாரிடம் விண்ணப்பிப்பது?

அலுவலக வேலை நாட்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் / வாக்காளர் பதிவு அதிகாரி / உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம்.

சிறப்பு முகாம் நாட்களில் அந்தந்த வாக்குச் சாவடி அமைவிடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்கலாம்.

அலுவலக வேலை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடம் அளிக்கலாம்.

என்னென்ன சான்றுகள் வேண்டும்?

பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

முகவரிச் சான்றுகள் எவை?

இந்திய கடவுச் சீட்டு / ஓட்டுநர் உரிமம் / வங்கி / கிஸான்/ அஞ்சல் அலுவலக சமீபத்திய கணக்குப் புத்தகம்/ குடும்ப அட்டை/வருமான வரித்துறையின் கணக்கீடு ஆணை / சமீபத்திய வாடகை உடன்படிக்கை/ இந்திய தபால் துறையால் சமீபத்தில் பெறப்பட்ட முகவரியுடன் கூடிய கடிதம் / சமீபத்திய குடிநீர்/ தொலைபேசி/ மின்சாரம்/ சமையல் எரிவாயு இணைப்பு ரசீது ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை முகவரிச் சான்றாகச் சமர்ப்பிக்கலாம்.

வயதுச் சான்றிதழ்

வயதுச் சான்றாக பிறப்புச் சான்றிதழின் நகல்/ வயது குறிப்பிடப்பட்ட 5, 8, 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்/ இந்திய கடவுச் சீட்டு / நிரந்தரக் கணக்கு எண் அட்டை / ஓட்டுநர் உரிமம் / ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் அளிக்கப்படலாம். 25 வயதுக்குக் கீழுள்ள மனுதாரர்கள் வயதுச் சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

புதிய வாக்காளர் சேர்க்க, புகைப்படம் புதிதாகப் பதிவேற்ற

ஜன. 01/2021 அன்று 18 வயது நிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் படிவத்தில் உள்ள உறுதிமொழியினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் வாக்காளரின் புகைப்படங்களின் தரத்தை மேம்படுத்தும் விதமாக விண்ணப்பதாரர்கள் 200 dpi resolution கொண்ட புகைப்படங்களை அளிக்க / தரவேற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் என்ன செய்ய வேண்டும்?

வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6A-ஐ நேரில் அளிக்க வேண்டும் - அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம். வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6A நேரில் அளிக்கப்படும்போது அதனுடன் கூட விண்ணப்பதாரரின் புகைப்படம், ஏனைய பிற விவரங்களுடன் விசாவின் செயல்திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய கடவுச்சீட்டின் தொடர்புடைய பக்கங்களின் ஒளிநகலையும் சேர்த்து அளிக்கவேண்டும்.

வாக்காளர் பதிவு அதிகாரி மூல கடவுச்சீட்டினை ஒப்பிட்டுச் சரிபார்த்து உடனடியாக திரும்பக் கொடுத்துவிடுவார். படிவம் 6A தபாலில் அனுப்பப்படும்போது, கடவுச்சீட்டின் ஒளிநகல்கள் சுய சான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.

முகவரி மாற்றத்துக்கு என்ன படிவம் வேண்டும்?

ஒரு வாக்காளர் தான் வசிக்கும் இருப்பிடத்தை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்றினால் படிவம் 6-ல் விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் தற்போது வசிக்கும் தொகுதிக்குள்ளேயே இடம் பெயர்ந்தால் படிவம் 8Aஇல் விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளரின் விவரங்களில் திருத்தம் வேண்டியிருப்பின் படிவம் 8Aஇல் விண்ணப்பிக்க வேண்டும்.

மாற்று புகைப்பட அடையாள அட்டை விண்ணப்பிக்க:

இடம் பெயர்தல் / திருத்தம் / வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்து போதல் ஆகிய காரணங்களுக்காக மாற்று புகைப்பட அடையாள அட்டை பெற வேண்டியிருப்பின் வட்டாட்சியர் / மண்டல அலுவலகத்தில் படிவம் 001 இல் விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர்கள் தங்களுக்கான திருத்தங்களை இன்றும் நாளையும் நடக்கும் சிறப்பு முகாமில் மேற்கண்ட முறை மூலம் படிவங்களை பூர்த்தி செய்து மாற்றம் செய்துக்கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x