பாடி ஸ்கிப்பிங்கில் உலக அளவில் கின்னஸ் சாதனைக்கு காத்திருக்கும் கோவை மாணவர்: கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் தவிப்பு

பாடி ஸ்கிப்பிங்கில் உலக அளவில் கின்னஸ் சாதனைக்கு காத்திருக்கும் கோவை மாணவர்: கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் தவிப்பு
Updated on
1 min read

கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பாடி ஸ்கிப்பிங்கில் கின்னஸ் சாதனை படைப்பதற்கு, பதிவு செய்துவிட்டு கட்டணம் செலுத்த முடியாததால் காத்திருக்கிறார். கட்டணம் செலுத்துவதற்கு போதிய உதவி கிடைத்தால், கின்னஸ் சாதனை நிகழ்த்த முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி, விவசாயி. இவரது மகன் பி.சக்தி, கோவை சரவணம்பட்டியில் தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். விளையாட்டில் ஈடுபாடு அதிகம் கொண்ட சக்திக்கு, கையை ஸ்கிப்பிங் போல் பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் முன்புறமாக 40 தடவையும், பின்புறமாக 32 தடவையும் செய்து, கடந்த ஜூன் 27-ம் தேதி, தேசிய அளவில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், உலக அளவில் பாடி ஸ்கிப்பிங்கில் ஒரு நிமிடத்தில் முன்புறமாக 43 தடவையும், பின்புறமாக 24 தடவையும் ஸ்கிப்பிங் செய்து சாதனை படைக்கும் விதமாக கின்னஸ் சாதனைக்கு பதிவு செய்துள்ளார். அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வரும் 15-ம் தேதிக்குள் சாதனையை முடித்து, லிம்கா அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். ஆனால், லிம்காவுக்கு தனது சாதனை பதிவை அனுப்புவதற்கு ரூ.80 ஆயிரம் தேவைப்படுவதால், பணம் இல்லாமல் அழைப்பு கிடைத்தும் காத்திருந்து வருகிறார்.

இது குறித்து கின்னஸ் சாதனைக்கு முயன்று வரும் மாணவர் சக்தி கூறியதாவது: உடலினை உறுதி செய்தால்தான் நாம் வாழ்நாளில் நினைத்தாற்போல் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஊட்டும் விதமாக, நாமும் ஒரு கின்னஸ் சாதனைக்கு முயலலாம் என்ற விதத்தில் செயல்பட்டு வருகிறேன்.

இதற்காக, கடந்த ஏப்ரல் மாதம் லிம்கா நிறுவன பதிவுக்காக, பாடி ஸ்கிப்பிங்கில் முன்புறமாக 40 தடவை செய்வதற்கு விண்ணப்பித்து இருந்தேன். எனது விண்ணப்பத்தை பரிசீலனை செய்வதற்கு 5 மாதங்கள் கடந்து விட்டன. அதற்குள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி, பணம் செலுத்தி சூப்பர்ஃபாஸ்ட் வழி மூலமாக பதிவு செய்துவிட்டார். கட்டணமில்லா பதிவில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், நான் பின்தங்கி விட்டேன்.

இந்த முறை, பாடி ஸ்கிப்பிங்கில் முன்புறம், பின்புறம் எனத் தனித்தனியாக மேற்கொள்வதற்கு சூப்பர் ஃபாஸ்ட் வழி மூலமாக விண்ணப்பித்துள்ளேன். இதற்கு கட்டணமாக ரூ.80 ஆயிரம் செலவு செய்ய வேண்டி உள்ளது.

பணம் இல்லாமல் கடந்த ஒரு மாதமாக காத்திருக்கிறேன். வரும் 15-ம் தேதிக்குள் நிகழ்த்தி முடிக்க வேண்டும். நிதி உதவி கிடைக்கும்பட்சத்தில், உலக அளவில் கின்னஸ் சாதனை செய்துவிடுவேன் என்றார்.

மாணவரின் கின்னஸ் சாதனைக்கு உதவ விரும்புகிறவர்கள் 96299 20379 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in