Published : 21 Nov 2020 11:56 AM
Last Updated : 21 Nov 2020 11:56 AM

கரோனா சிகிச்சையில் நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி சாதனை: சிகிச்சைக்குச் சேர்ந்த அனைவரும் பூரண குணம்

தமிழகத்தில் கரோனா சிகிச்சைக் களமானது அலோபதி மருத்துவத்தைக் கடந்து நம் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மகத்துவத்தைக் காட்டிக் கொடுத்துள்ளது.

நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மூன்று மாதங்களுக்கு மேலாக கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை யாரும் அங்கு கரோனாவுக்கு பலியாகவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி. நமது பாரம்பரிய மருத்துவமுறையில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான கரோனா நோயாளிகளைப் பூரணமாகக் குணப்படுத்தி அவர்களது இல்லங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர் அரசு சித்த மருத்துவர்கள்.

கரோனா நோயாளிகளுக்குச் சித்த மருத்துவ முறையில் என்ன வகையான சிகிச்சையளிக்கப்படுகிறது? ஒருவர் வீட்டிலேயே எப்படிக் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது குறித்து நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் விரிவுரையாளர் மருத்துவர் ஒய்.ஆர்.மானக்‌ஷா 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் பேசினார்.

''கரோனா நோயாளிகளுக்குச் சித்த மருத்துவ சிகிச்சையில் தினமும் காலை, மாலையில் 60 மில்லி கபசுரக் குடிநீர் வழங்குகிறோம். இதே போல் காலை, மாலையில் ‘ஹெல்த் ட்ரிங்க்’ எனப்படும் உடல் நலத்தைப் பேணும் பானம் கொடுக்கிறோம்.

அதில் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, பாதி எழுமிச்சையைத் தோலோடு போடுவோம். இதில் வைட்டமின் சி நிறைந்து இருக்கும். இதனோடு கிராம்பு, கடுக்காய்த் தூள், 5 துளசி இலைகள், 5 மிளகு ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்துக் கொடுப்போம். இதில் சர்க்கரை நோயாளிகளுக்குத் தேன் சேர்க்காமலும், மற்றவர்களுக்குத் தேன் சேர்த்தும் கொடுப்போம். பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். மிளகு அந்த அளவுக்கு நல்லது. அதனால்தான் இந்தக்கலவையில் மிளகும் சேர்க்கிறோம்.

சிலருக்கு கரோனா தாக்கத்தால் தொண்டையில் ஒருவித அழுத்தம், பிடிப்பு இருக்கும். அவர்களுக்குப் பாலில் மஞ்சள், மிளகு சேர்த்துக் கொடுப்போம். மஞ்சளில் குர்குமினும், மிளகில் பைப்ரினும் இருக்கிறது. இது தொண்டையில் இருக்கும் வைரஸ், பாக்டீரியா உள்பட எந்தக் கிருமிகளையும் அழித்துவிடும். இதேபோல் 80 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் ஆவி பிடிக்கச் செய்வோம். இதுவும் கிருமி ஒழிப்பில் நல்ல பலன் தரும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் பிரத்யேகமாக மஞ்சள் தூளை மட்டுமே போட்டு ஆவி பிடிக்கலாம். அல்லது, வேப்ப இலை, நொச்சி இலை, யூகலிப்டஸ் 2 சொட்டு விட்டும் ஆவி பிடிக்கலாம். இதுபோகக் கரோனா நோயாளிகளுக்கு மூச்சுப்பயிற்சியும் ரொம்ப முக்கியம். வலது மூக்கின் வழியாக மூச்சை எடுத்து அதை சிறிதுநேரம் நிறுத்திவைத்து இடது மூக்கின் வழியாகவும், இடது மூக்கின் வழியாக மூச்சை எடுத்து அதைச் சிறிது நேரம் நிறுத்தி வைத்து வலது மூக்கின் வழியாகவும் தலா பத்து முறை விடச் சொல்லுவோம். இது நுரையீரலை விரிவடையச் செய்து, சுவாசப் பிரச்சினைகளைப் போக்கும்.

மருத்துவர் ஒய்.ஆர்.மானக்‌ஷா.

கரோனா நோயாளிகள் பலருக்குச் சுவை, மணம் இருக்காது. அவர்களுக்குச் சித்த மருத்துவத்தில் ’ஓம பொட்டணம்’ என ஒரு மருத்துவம் இருக்கிறது. அதாவது, ‘ஓமத்தை நன்கு இளஞ்சூட்டில் வறுத்துக் கொள்ள வேண்டும். ஒரு தூய்மையான வெள்ளைத் துணியில் அதைக்கட்டி அடிக்கடி சுவாசிக்க வேண்டும்.’ இப்படிச் செய்வதன் மூலம் சுவை, மணம் தெரியத் தொடங்கும். கரோனா நோயாளிகள் வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு மற்றும் பேரீச்சம் பழம், பாதாம், முளைக்கட்டிய தானியங்கள், கீரை வகைகள், சிக்கன், மட்டன் என எல்லாம் சாப்பிடலாம்.

தண்ணீரை மட்டும் கொதிக்க வைத்தே பருக வேண்டும். தொண்டைப் பிடிப்பு இருந்தால் கல் உப்பு போட்டு தண்ணீரைத் தொண்டையில் விட்டு கொப்பளிக்கலாம். இதேபோல் கரோனா நோயாளிகளுக்கு இரவில் திரிபலா சூரணம் கொடுப்போம். இது கடுக்காய், நெல்லிக்காய், தாண்டிக்காய் கலந்த கலவையாகும். இதைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிடலாம். இதேபோல் காலையில் திரிகடுக சூரணம் கொடுப்போம். இது சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த கலவை. இதைத் தேனில் சேர்த்துச் சாப்பிடலாம். சளி, இருமல் அதிகம் இருந்தால் தாளிசாதி சூரணம் கொடுப்போம். இது ஏழு மூலிகைகள் சேர்ந்த கலவை. நெல்லை சித்த மருத்துவக்கல்லூரியில் ஆயிரக்கணக்காண கரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து உள்ளனர். ஒரு இறப்பு கூட இல்லாத அளவுக்கு நம் சித்த மருத்துவம் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

கரோனா வந்த பிறகு மக்களுக்குச் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. முந்தைய காலங்களில் எல்லாம் வீட்டு அஞ்சறைப்பெட்டியில்தான் மருத்துவம் இருந்தது. இன்று தொட்டதெற்கெல்லாம் அலோபதி மருத்துவமனையைத் தேடி ஓடும் காலத்தில் நம் மரபு வைத்தியமான சித்த மருத்துவத்தின் மேன்மையை மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்.

நாட்டுக்கோழி முட்டை, பனைவெல்லம் என மக்கள் இயற்கையை நோக்கித் திரும்புவதைப்போல இப்போது சித்த மருத்துவம் நோக்கியும் பார்வையைப் பதித்துள்ளனர். உணவே மருந்து என்னும் உன்னதமான உண்மை மக்களுக்கு புரியத் தொடங்கியுள்ளது. இதுவும் கரோனா என்னும் கிருமியால் நிகழ்ந்திருக்கும் மாற்றம்'' என்றார் மருத்துவர் ஒய்.ஆர்.மானக்‌ஷா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x