Published : 21 Nov 2020 03:15 AM
Last Updated : 21 Nov 2020 03:15 AM

42 ஆண்டுகளுக்கு பின்பு லண்டனில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் கோயில் செயல் அலுவலரிடம் ஒப்படைப்பு: சிலை கடத்தல் தடுப்பு காவல் துறையினருக்கு முதல்வர் பாராட்டு

சென்னை

நாகப்பட்டினம் ராஜகோபால பெருமாள் கோயிலில் இருந்து 42 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்டு, லண்டனில் இருந்து மீட்கப்பட்ட ராமர், சீதை, லட்சுமணன் சிலைகளை கோயில் செயல் அலுவலரிடம் வழங்கிய முதல்வர் பழனிசாமி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளை பாராட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தல வரலாறு

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி, அனந்தமங்கலம் கிராமத்தில் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட  ராஜகோபால பெருமாள் கோயில் உள்ளது. இலங்கையில் யுத்தம் முடித்து ராமர் அயோத்தி திரும்பும் வழியில் ராவண அரக்கர்களின் வாரிசுகளான இரக்கபிந்து மற்றும் இரக்தராட்சகன் ஆகியோரை அழிக்க அனுமனுக்கு உத்தரவிட்டார். அனுமனும் தேவர்கள் வழங்கிய பத்து விதமான ஆயுதங்களுடன் சென்று அவர்களுடன் போரிட்டு, அரக்கர்களை அழித்து, அயோத்திதிரும்பும் வழியில் அனந்தமங்கலத்தில் போரில் வென்ற ஆனந்தத்துடன் இக்கோயிலில் காட்சியளித்ததாக புராணங்களில் கூறப்படுகிறது.

இக்கோயிலில் கடந்த 1978-ம் ஆண்டு நவ.23-ம் தேதி ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் அனுமர் சிலைகள் களவு போயின. தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முயற்சியால் ராமர், லட்சுமணன் மற்றும் சீதை சிலைகள் லண்டனில் இருப்பது கண்டறியப்பட்டன. தமிழக அரசின் வழிகாட்டுதல்படி இச்சிலைகள் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் டெல்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

மீட்கப்பட்ட புராதன சுவாமி சிலைகளை முதல்வர் பழனிசாமி நேற்று பார்வையிட்டு, சிலைகளை  ராஜகோபால பெருமாள் கோயிலில் மீண்டும் வைத்துவழிபடும் வகையில், கோயில் செயல் அலுவலரிடம் ஒப்படைத்தார். மேலும், 42 ஆண்டுகளுக்கு முன் களவு போன சுவாமி சிலைகளைக் கண்டெடுக்க தீவிர முயற்சி எடுத்து மீட்டெடுத்த தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்களை முதல்வர் பாராட்டினார்.

இந்நிகழ்வில், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தலைமைச் செயலர் கே.சண்முகம், உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், அறநிலையத் துறைச் செயலர் விக்ரம் கபூர், ஆணையர் எஸ்.பிரபாகர், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங், டிஐஜி அன்பு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x