Last Updated : 13 Oct, 2015 05:23 PM

 

Published : 13 Oct 2015 05:23 PM
Last Updated : 13 Oct 2015 05:23 PM

இந்தியை தேசிய மொழியாக்க விரும்பினார் பாரதி: அலகாபாத்தில் சீனி.விஸ்வநாதன் பேச்சு

இந்தி நம் நாட்டின் தேசிய மொழியாக வேண்டும் என மகாகவி சுப்பரமணிய பாரதியார் விரும்பியதாக சீனி.விஸ்வநாதன் கூறியுள்ளார். இதை அவர், உ.பி.யின் அலகாபாத்தில் உள்ள பாஷா சங்கம் அமைப்பு பாரதி பற்றி நடத்திய விழாவில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை அன்று அலகாபாத்தில் பாஷா சங்கம் பாரதி பற்றிய சிறப்புரைக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில், பாரதியின் படைப்புகளுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவரான சீனி விசுவநாதன் முக்கிய விருந்தினராக பங்கேற்று பாரதி பற்றி சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்த பாஷா சங்கத்தில் பொதுச் செயலர் முனைவர் எம்.கோவிந்தராஜன் அவர்கள் தொகுப்புரை வழங்கியதுடன், சீனி விசுவநாதன் தமிழில் வழங்கிய உரையை இந்தியில் மொழி பெயர்ப்பு செய்து அனைவரும் பாரதியின் பெருமையை அறியும் படி செய்தார்.

இந்த விழாவில் சீனி விசுவநாதன் ஆற்றிய உரையில் இருந்து:

தமிழ் நாட்டில் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி குடும்ப சூழ்நிலை காரணமாக உபியின் காசி வாசத்தை மேற்கொண்டார். காசியில் ஜெய் நாராயணா கலாசாலை என்ற பள்ளியில் இந்தியும் சமஸ்கிருதமும் பயின்றார். அலகாபாத் பல்கலைக் கழகத்தில் நுழைவுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பாரதியின் வாழ்க்கையில் காசி வாசம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது எனலாம்.

பிறமொழி பகை இல்லாத பாரதி

இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் காசிக்கு வந்து செல்லும் மக்களைக் கண்ட பாரதிக்கு புதிய சிந்தனை பிறந்தது. பாரதியின் தேசீய ஒருமைப் பாட்டிற்கு வித்திட்டது இந்த காசி நகரம் எனலாம். பாரதி தமிழ்ப் பற்று கொண்டவர். ஆனால் பிற மொழி பகை உணர்வு இல்லாதவர். 1906 ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி விளங்க வேண்டும் என்று விரும்பினார். சில அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு இந்தி வகுப்புகள் நடத்தியவர் பாரதி. இவர் தாம் இந்தியர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொண்டவர்.

பெண்கள் பத்திரிகையில் பாரதி

திலகரை குருவாக ஏற்றுக் கொண்டு அவர் நடத்திய ‘கேசரி’ பத்திரிக்கையில் வெளிவந்த செய்திகளை மொழி பெயர்த்து ‘இந்தியா’ பத்திரிக்கையில் வெளியிட்டு தமிழ் மக்கள் அறியும் படி செய்தார். பெண்களுக்காக என்றே ‘சக்கரவர்த்தினி’ என்ற மாதப் பத்திரிக்கை நடத்தப்பட்டது. அதில் பாரதி தாதாபாய் நௌரோஜி, கோபால கிருஷ்ண கோகலே, விவேகானந்தர், இராமகிருஷ்ண பரம ஹம்ஸர் மற்றும் அகல்யா பாய் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதி வந்தார். இதைப் படித்த ஒரு பெண்மணி பாரதியிடம் வந்து பெண்கள் பத்திரிக்கை என்று போட்டுவிட்டு தேசத் தலைவர்களைப் பற்றி எழுதுகிறீர்களே! இதனால் பெண்களுக்கு என்ன பயன்? என்று கேட்டார். அதற்கு பாரதி, நீங்கள் பொறுமையுடன் மீண்டும் மீண்டும் அதைப் படியுங்கள் புரியும் என்றார். பாரத நாட்டின் தாய்மார்கள் தேசத்திற்கு உழைக்கும் புத்திரர்களைப் பெற்றுத் தர வேண்டும் என்று பாரதி விரும்பினார்.

பாரதியின் தீர்க்க தரிசனம்

பங்கிம்சந்திரர் இயற்றிய வந்தே மாதரப் பாடல்களை அதன் பொருள் புரியாமலேயே தமிழ் நாட்டு மக்களும் பாடி வந்தனர். பொருள் புரிந்து பாட வேண்டும் என்பதற்காக பாரதி அதனைத் தமிழில் மொழி பெயர்த்தார். பங்கிம்சந்திரரின் பாடல் வங்க மாகாணத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதால் அம்மாகாண மக்கள் தொகையான ஏழு கோடி மக்களைக்குறிப்பிடுவதாக அமைந்து இருந்தது. அதனை இந்திய மக்களுக்கான பாடலாகக் கருதி அப்போதைய இந்திய ஜனத்தொகையான முப்பது கோடி மக்களுக்கும் என்று மாற்றி அமைத்தார்.

சுதந்திரம் எப்பொழுது கிடைக்கும் என்று தெரியாத அடிமை நாட்டில் பிறந்து, வாழ்ந்து, மடிந்த பாரதி 1908 ஆம் ஆண்டிலேயே ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிசனமாகப் பாடிய முதல் கவி பாரதி. மேலும் சுதந்திரம் பெற்ற பின்பு நாடு எந்தெந்த துறைகளில் எப்படி முன்னேற வேண்டும் என்று பட்டியல் இட்டுப் பாடியவர் பாரதி.

அல்லா, ஏசுவின் பெயராலும் பாடல்கள்

இந்திய மக்கள் அனைவரும் ஓர் குலமாக ஒற்றுமை உணர்வுடன் வாழ் வேண்டும் என்று ஆசைப்பட்டார் பாரதி. மத பேதங்கள் இருக்கலாம் ஆனால் மத விரோதம் கூடாது என்ற கொள்கையை அழுத்தம் திருத்தமாக வற்புறுத்தி வந்தார் பாரதி. இந்துவாகப் பிறந்த ஏசுவைப் பற்றியும், முஸ்லிம் மார்க்கத்தின் மகிமை பற்றியும் எழுதியவர். அல்லா பெயரிலும், ஏசுவின் பெயரிலும் பாடல்களை படைத்தார் பாரதி. அந்தக் காலத்திலேயே அந்தணர் அல்லாத கனகலிங்கம் என்பவருக்கு பூணூல் அணிவித்து புரட்சி செய்தவர் பாரதி.

பாரதியை இன்றும் பலர் கவிஞனாகவேக் கருதுகின்றனர். ஆனால் பாரதி ஒரு கதாசிரியராகவும், சிறந்த சொற்பொழிவாளராகவும், மொழி பெயர்ப்பாளராகவும், உன்னதமான படைப்பாளராகவும், தமிழ்-ஆங்கில பத்திரிக்கைகளின் ஆசிரியராகவும் விளங்கியவர். 39 ஆண்டு கால குறுகிய வாழ்நாளில் நாட்டு மக்களுக்குப் புது நெறிகளையும், புது வழி முறைகளையும் ஏற்படுத்திக் கொடுத்தவர். இவ்வாறு விசுவநாதன் தெரிவித்தார்.

இந்த விழாவிற்கு முனைவர் ஓங்காரநாத் திரிபாதி தலைமை வகித்தார். அலகாபாத்தில் உள்ள விஞ்ஞான் பரிஷத் பிரயாகி அமைப்பின் பொதுச் செயலர் முனைவர் சிவகோபால்

மிஸ்ரா, துணைத் தலைவர் முனைவர் கே.கே.பூடானி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவில் பாஷா சங்கத்தின் பொருளாளர் திரு. சி.எம்.பார்கவா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இணைச் செயலர் திரு பஜ்ரங்க பலி கிரி அவர்கள் நன்றியுரை வழங்கினார் . இந்த பாஷா சங்கம், மொழிகளை பாலாமாக்கி தேசிய ஒருமைப்பாட்டிற்காக கடந்த 1962 ஆம் ஆண்டு அலகாபாத்தில் துவங்கப்பட்டது இதில், தமிழர்கள் உட்படப் பல்வேறு மாநிங்களை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x