

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 17-ம் தேதி தொடங்கியது.
இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சந்நிதிமுன்பு மங்கள இசை ஒலிக்க, வேதமந்திரங்களை சிவாச்சாரியார்கள் முழங்க 64 அடி உயரம் உள்ள தங்கக் கொடி மரத்தில் நேற்று காலை5.50 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின்னர், மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது, ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தர்கள் முழக்கமிட்டனர். முன்னதாக, மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு, 10 நாள் உற்சவம் ஆரம்பமானது.
கரோனா தொற்றால் பஞ்சமூர்த்திகளின் மாட வீதியுலா மற்றும் மகா தேரோட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, அண்ணாமலையார் கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் உற்சவம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பஞ்சமூர்த்திகளின் உற்சவம் நேற்று காலையும், இரவும் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இன்று நடைபெறும் 2-ம் நாள்உற்சவத்தில் விநாயகர் மற்றும்சந்திரசேகரரின் உற்சவம் காலையிலும், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் பஞ்சமூர்த்திகளின் உற்சவம் இரவும் நடைபெறும்.
வாக்குவாதம்
அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றம் நடைபெற்ற பிறகுஅமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வந்தார். அப்போது அவருடன் வந்த நகர அதிமுக செயலாளர் செல்வம், அமைச்சர் வருவதற்கு முன்பே கொடியேற்றியது ஏன்? என கேட்டு இணை ஆணையர் மற்றும் சிவாச்சாரியார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார்.