Published : 21 Nov 2020 03:15 AM
Last Updated : 21 Nov 2020 03:15 AM

அவசர சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்; ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை: மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்; 6 மாதம் சிறை

சென்னை

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். தடையை மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் புளூவேல் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் மணிக்கணக்கில் ஈடுபட்டு, அதில் வரும் இலக்குகள் மூலம் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைமையும் உருவானது. இதையடுத்து, இந்த விளையாட்டுகள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டன. அதன்பின், சீனா வால் உருவாக்கப்பட்ட பப்ஜி உள் ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும் தற்போது மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர் பாக, பல பகுதிகளில் காவல்துறையினர் அவ்வப்போது ஆய்வு நடத்தி, பணத்தை பறிமுதல் செய்வதுடன், சூதாட்டத்தில் ஈடுபடுவோரையும் கைது செய்கின்றனர். குறிப்பாக, ஊரடங்கு காலத்தில் அதிகளவில் இதுபோன்ற வழக்குகள் பதிவாகின.

சூதாட்டத்துக்கு தடை

ஒருபுறம் நேரடி சூதாட்டம் தடை செய்யப்பட்டு வந்தாலும், ஆன்லைனில் கணினி, கைபேசி மூலம் ரம்மி விளையாடுவது அதிகரித்து வந்தது. இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஈடுபட்ட நிலையில், ஒரு சிலர் கடன் வாங்கி பணத்தை ரம்மி விளை யாடி இழந்ததால், உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறின. இதில், சூதாட்டத்தை ஒடுக்கும் காவல் துறையினரும் பணத்தை இழந்து அதன்பின் உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வுகளும் நடந்தன.

சிறுவன் ஒருவன் தன் பெற்றோரின் பணத்தை ஆன்லைன் ரம்மியில் தொலைத்த கதையும் அரங்கேறியது. இதையடுத்து, ஆன்லைன் ரம்மி உள் ளிட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும். இந்த விளையாட்டுகளை பிரபலப்படுத்தும் நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இதுதொடர்பாக தொடரப் பட்ட வழக்கில், நீதிபதி என்.கிருபா கரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங் கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ‘‘பிரபலங்களை பலர் தங்களின் எதிர்காலமாக கருதுகின்றனர். பிரபலங் கள் சூதாட்ட விளம்பரங்களில் நடித்து அதனை ஊக்குவிக்கின்றனர். ஆன் லைன் சூதாட்டத்தால் இதுவரை 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதனால் அந்த பிரபலங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்" என்று தெரி வித்தனர்.

அதேபோல், ஆன்லைன் ரம்மி விளை யாட்டுக்கு தடை கோரிய வழக்கில், தமிழக அரசு வழக்கறிஞர், ‘தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய சட்ட நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருவதாக முதல்வர் அறிவித் துள்ளார். அரசு மிகுந்த முக்கியத் துவத்துடன் இந்தப் பிரச்சினையை அணுகி வருகிறது’’ என்றார்.

அப்போது, நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘ஆன்லைன் ரம்மி விளையாட்டால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.பிரபலமானவர்கள் ஆன்லைன் சூதாட்டத்துக்கு விளம்பரம் செய் கின்றனர். தமிழகத்தில் விரைவாக அந்த விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தினர்.

இதற்கிடையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஆன் லைன் ரம்மி உள்ளிட்ட விளை யாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இளைஞர்கள் பாதிப்பு

இதுகுறித்து, ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

‘ஆன்லைன் ரம்மி’ போன்ற இணைய வழி விளையாட்டுகளில் பணம் வைத்து விளையாடுவதன் மூலம் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்துவிடும் அவலத்தை தடுக் கும் விதமாக தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்ற உள்ளது. இந்த அவசர சட்டம், 1930-ம் ஆண்டு தமிழ் நாடு சூதாட்டச் சட்டம், சென்னை நகர காவல் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம் இயற்றப்பட உள்ளது.

இந்த சட்டம் இயற்றுவதன் மூலம், இவ்விளையாட்டில் பணம் வைத்து விளையாடுவோரையும் அதில் ஈடு படுத்தப்படும் கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களையும் தடை செய்ய முடியும். தடையை மீறி விளையாடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம், 6 மாத சிறை தண்டனை வழங்கவும் வழி செய்யும். ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத் திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராத மும் 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கவும் வழி செய்யும்.

இவ்விளையாட்டில் பணப்பரிமாற் றங்களை இணையவழி மூலம் மேற் கொள்வதை தடுக்கவும் இவ்விளை யாட்டை நடத்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தண்டிக்கவும் அவசர சட்டம் வழிவகுக்கும்.

எனவே, ‘ ஆன்லைன் ரம்மி’ போன்ற இணையவழி விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கியுள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x