Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

உள்ளாட்சித் தேர்தல் நடக்காத 9 மாவட்டங்களுக்கான மத்திய அரசு மானியம் ரூ.1,254 கோடியை விடுவிக்க அமைச்சர் வேலுமணி கோரிக்கை

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களுக்கான மானியம் ரூ.1,254 கோடியை உடனே விடுவிக்குமாறு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடிசை வீடுகள், பழுதடைந்த வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய நிலையான வீடுகளை ஏற்படுத்தும் பிரதமரின் குடியிருப்பு திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார். அவர் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 2016 முதல் 2020 வரை ஒதுக்கப்பட்ட, 5 லட்சத்து 27 ஆயிரத்து 552 வீடுகளில் இதுவரை 4 லட்சத்து ஆயிரத்து 106 பயனாளிகளுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டு, 2 லட்சத்து 65 ஆயிரத்து 29 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 36 ஆயிரத்து 77 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. 1 லட்சத்து 26 ஆயிரத்து 446 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக 2016-2020 வரை மத்திய அரசின் பங்குத் தொகை ரூ.3,798 கோடி, மாநில அரசின் பங்கு ரூ.2,532 கோடி, கான்கிரீட் கூரை அமைக்க மாநில அரசின் கூடுதல் நிதி ரூ.2,638 கோடி என ரூ.8,968 கோடியில் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற 2.90 லட்சம் பயனாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

தமிழகத்தில் 2011 முதல் 2020 வரை உள்ளாட்சித் துறை சார்பில் நகர்ப்புறம், ஊரகப் பகுதிகளில் 17.08 லட்சம் பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளில் பணி ஆணை வழங்கப்பட்ட 18.30 லட்சம் வீடுகளில் 15.31 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியலில் விடுபட்ட 9.11 லட்சம் பெயர் மற்றும் விவரங்கள் ஆவாஸ் பிளஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, 2-ம் கட்ட திட்டத்தில் ஆவாஸ் பிளஸ் பட்டியலில் இருந்துபயனாளிகளை தேர்வு செய்ய விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும்.

கரோனா பரவல் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கான 14-வது நிதிக் குழுவின் தமிழகத்துக்கான அடிப்படை மானியம் ரூ.548.76 கோடி, செயலாக்க மானியம் ரூ.705.62 கோடி என ரூ.1,254.38 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊராட்சிகள் இயக்குநர் கே.எஸ்.பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x