

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் சரண் அடைந்த யுவராஜிடம், விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் 2 நாட்கள் அவகாசம் அளித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ், கடந்த 11-ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார். அவரை சிறையில் அடைத்த சிபிசிஐடி போலீஸார் கடந்த 12-ம் தேதி நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் காவல் எடுத்து விசாரணை நடத்தினர்.
நேற்றுடன் காவல் முடிந்த நிலையில், நேற்று மதியம் 1.30 மணிக்கு சிபிசிஐடி போலீஸார் யுவராஜை, மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, யுவராஜிடம் விசாரணை நடத்த மேலும் 5 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அம்மனு மீதான விசாரணையை மாலை 3.30 மணிக்கு நீதிபதி மலர்மதி ஒத்திவைத்தார்.
இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்தில் யுவராஜை அமர வைத்திருந் தனர். மாலை மீண்டும் நீதிமன்றம் கூடியதும் யுவராஜ் ஆஜர்படுத்தப்பட்டார்.
மனுவை விசாரித்த நீதிபதி மலர்மதி, யுவராஜிடம் சிபிசிஐடி போலீஸார் மேலும் 2 நாட்கள் விசாரணை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார். அதன்படி யுவராஜை மீண்டும் 19-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.