

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை கோயில் அருகே கடற்கரையில் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.
கந்தசஷ்டி திருவிழா கடந்த 15-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு,1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது.
மாலை சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்வதற்காக போர்க்கோலம் பூண்டு சஷ்டி மண்டபத்தில் இருந்து புறப்படாகி மாலை 4.33 மணியளவில் கோயில் அருகேயுள்ள கடற்கரைக்கு வந்து சேர்ந்தார்.
முன்னதாக, சிவன் கோயிலில் இருந்து நேரடியாக அங்கு வந்த சூரபத்மன், முதலில் யானைத்தலையுடன் கூடிய கஜமுகசூரனாக வர, முருகப்பெருமான் தனது வேலால் மாலை 4.49 மணிக்கு சம்ஹாரம் செய்தார்.
தொடர்ந்து, சிங்க முகத்துடன் உருமாறி வந்த சூரனை மாலை 4.56 மணிக்கும், தனது சுயரூபத்துடன் வந்த சூரபத்மனை மாலை 5.04 மணிக்கும் சுவாமி தனது வேலால் வதம் செய்தார். பின்னர், சூரபத்மனை சேவலாகவும், மாமரமாகவும் மாற்றி சுவாமி ஆட்கொண்டார்.
தொடர்ந்து சண்முகவிலாச மண்டபத்தில் சுவாமிக்கு தீபாராதனை, 108 மகாதேவர் சன்னதியில் சுவாமிக்கு சாயாபிஷேகம் நடைபெற்றது. வீடுகளில் விரதம் கடைபிடித்த பக்தர்கள் சூரசம்ஹாரம் முடிந்ததும் தங்களது விரதத்தை நிறைவு செய்தனர்.
நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் தேசிக ஞானசம்பந்தம் சுவாமிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
கரோனா ஊரடங்கால் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. கடற்கரையில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தை வெளியாட்கள் பார்க்க முடியாதவண்ணம் தகர ஷீட்டுகளால் மறைக்கப்பட்டிருந்தது. நகருக்குள் வெளியூர் வாகனங்கள் வராமல் தடுக்க 7 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விழாவில் இன்று மாலை 6 மணிக்கு சுவாமி - அம்மன் தோள்மாலை மாற்றும் வைபவமும், நள்ளிரவு 11 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. விழா நிகழ்வுகள் அனைத்தும் கோயில் நிர்வாகம் சார்பில் யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பழநியில் சூரசம்ஹாரம்
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழநியில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று கிரிவீதிகளில் நடந்தது. கரோனா காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கிரிவீதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பக்தர்கள் காண யூ-டியூப் மூலம் கோயில் நிர்வாகம் நேரடி ஒளிபரப்பு செய்தது.
நேற்று மாலை சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் கிரிவீதியை வந்தடைந்தார். இதைத் தொடர்ந்து வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரன், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் ஆகியோரை சின்னக்குமாரர் வதம் செய்தார்.