

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகிப்பவர் ஏ.கே.டி. ஆறு முகம். இவரது வீடு கம்பன் நகர் வயல் வெளி பகுதியில் உள்ளது. இவர் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது இந்திராநகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அய்யங்குட்டிபாளையம் பகுதியில் நடந்த ஒரு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட ஏ.கே.டி. ஆறுமுகம் காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காரில் ஓட்டுநரும், ஏ.கே.டி. ஆறுமுகம் மட்டும் இருந்தனர்.
கம்பன் நகர் ரயில்வே கேட் புறவழிச்சாலையில் வந்தபோது, அங்கு 10-க்கும் மேற்பட்ட பைக்குகளில் கத்தியுடன் வந்த மர்ம நபர்கள் ஏ.கே.டி. ஆறுமுகத்தின் கார் மீது கற்களை வீசி எறிந்தனர். இதில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. மர்ம நபர் ஏ.கே.டி. ஆறுமுகம் இருந்த பகுதியில் அரிவாளால் வெட்ட முயன்றார்.
அப்போது கார் வேகமாக சென்றதால் அந்த வெட்டு காரின் பின்பக்க கண்ணாடியில் விழுந்தது. தொடர்ந்து ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றதால் ஏ.கே.டி. ஆறுமுகம் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தகவலறிந்த தெற்கு பகுதி எஸ்பி லோகேஸ்வரன், முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
முதல்வர் நாராயணசாமி, ஏ.கே.டி.ஆறுமுகத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். போலீஸாரிடம், குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிந்து அவர் களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.
சாலை மறியல்
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவத்தை கண்டித்தும், உடனடியாக மர்மநபர்களை கைது செய்யக் கோரியும் ஏ.கே.டி. ஆறுமுகத்தின் ஆத ரவாளர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையம் முன்பு வழுதா வூர் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றதால் ஏ.கே.டி. ஆறுமுகம் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.