

பாலக்கோடு அருகே 55 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானையை உயிருடன் மீட்ட வனத்துறையினருக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி அருகிலுள்ள ஏலுகுண்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் கடந்த 19-ம் தேதி காலை தனது நிலத்தை பார்த்து வர சென்றார். அப்போது, அங்கிருந்த கிணற்றுக்குள் இருந்து யானை பிளிறும் சத்தம் கேட்டது. அங்கு பார்த்தபோது, கிணற்றுக்குள் யானை ஒன்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் இப்பகுதி அமைந்திருப்பதால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர்கள் ராஜ்குமார், பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆலோசனைகளுக்குப் பின்னர், மயக்க ஊசி செலுத்தி கிரேன் வாகன உதவியுடன் யானையை மீட்பது என முடிவு செய்யப்பட்டது. அது, சுமார் 22 வயதுடைய பெண் யானை என்பதும் தெரிய வந்தது.
ஆலோசனை முடிவுகளின்படி, கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் கிணற்றில் தவித்த யானைக்கு பிரத்தியேக துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். சற்று நேரத்தில் யானை மயக்கமடைந்ததைத் தொடர்ந்து கிரேன் மூலம் அன்று இரவு 8.45 மணியளவில் யானை உயிருடன் மீட்கப்பட்டது. முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மாரண்ட அள்ளி அருகில் காப்புக்காட்டில் யானை விடுவிக்கப்பட்டது. படிப்படியாக யானைக்கு மயக்கம் தெளியத் தொடங்கியதும் யானை மெதுவாக வனத்துக்குள் நடந்து செல்லத் தொடங்கியது.
55 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்ததாலும், மயக்க ஊசி செலுத்தி மீட்கப்பட்டதாலும் யானையில் உடல் நலத்தில் ஏதேனும் பின்னடைவு ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க வனத்துறை குழு அமைக்கப்பட்டிருப்பதாக பாலக்கோடு வனச் சரகர் செல்வம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
மீட்கப்பட்ட யானை வனத்தில் விடுவிக்கப்பட்ட சிறிது நேரத்துக்குப் பின்னர் மயக்க நிலையில் இருந்து மீளத் தொடங்கியது. சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் யானை நடந்து சென்றது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச் சரகத்துக்குள் யானை சென்று விட்டது. மீண்டும் யானை வருகிறதா என்று கண்காணிக்கும் பணியில் பாலக்கோடு சரக வனத்துறை பணியாளர்கள் குழு 2 நாட்கள் வரை ஈடுபடுவர். அதேநேரம், மீட்கப்பட்ட யானையின் நடமாட்டம், உடல்நிலை போன்றவை குறித்து உயரதிகாரிகள் வழிகாட்டுதலைப் பின்பற்றி, கால்நடை மருத்துவர் பிரகாஷ் குழுவினர் மற்றும் தேன்கனிகோட்டை வனச்சரக குழுவினர் இணைந்து குறிப்பிட்ட சில நாட்களுக்கு கண்காணிப்பு மேற்கொள்வர்.
இவ்வாறு கூறினார்.
கிணற்றிலிருந்து யானை மீட்கப்பட்டதை அறிந்த மத்திய சுற்றுச் சூழல், வனம், காலநிலை மாற்றம் துறை, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர் வனத்துறையினரின் பணியை தன் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
‘தமிழ்நாடு மாநிலம் தருமபுரியில் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பெண் யானையை வனத்துறையினர் மீட்டது மற்றும் யானைக்கு உணவு வழங்கியது ஆகிய பணிகள் அற்புதமானவை’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது, பாலக்கோடு அருகே கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணியில் ஈடுபட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.