Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

வேலூர் மாநகராட்சி அதிகாரிகளை கிண்டலடித்து வியாபாரிகள்; பாஜகவினர் அறிவிப்பு பலகை வைத்து போராட்டம்: பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியதால் சலசலப்பு

வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் கால்வாய் அமைக்கும் பணியை கிடப்பில் போட்டதால் மாநகராட்சி அதிகாரிகளை கிண்டலடித்து வியாபாரிகள், பாஜக வினர் நூதன முறையில் அறிவிப்பு பலகை வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கிருபானந்த வாரியார் சாலையில் கடந்த 6 மாதங்களாக கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல், பல இடங் களில் நடைபெற்று வரும் கட்டு மானப் பணிகள் பாதியில் உள்ளன. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக, பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தினசரி குண்டும் குழியுமான சாலையில் பயணிக்கின்றனர். மாநகராட்சியில் உள்ள மோசமான சாலைகள், கால்வாய் பணிகள், குப்பை அகற்றும் பணிகள் தொடர் பாக மாநகராட்சி அதிகாரிகள் யாரை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தாலும் அதை சரி செய் யப்படுவதில்லை. அதிகாரிகள் பலரும் அலட்சியமாக பதில் அளிப் பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிண்டலடித்து அறிவிப்பு பலகை

கிருபானந்த வாரியார் சாலையில் கால்வாய் பணியை முடிக்காமல் ஆபத்தான நிலையில் விட்டுச் சென்றதற்கு நன்றி தெரிவித்து வியாபாரிகள் மற்றும் மாநகர பா.ஜ.க சார்பில் நேற்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

அந்த அறிவிப்பு பலகையில் ‘‘வேலூர் மாநகராட்சிக்கு நன்றிகள். நன்றாக இருந்த கால்வாயை திறந்த கால்வாயாக மாற்றியதற்கு நன்றி. கடந்த 6 மாதங்களாக இதை இப்படியே பராமரிப்பதற்கு நன்றி. மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததற்கு கோடான கோடி நன்றி. மனுவை பெற்றுக்கொண்டு கிருபானந்த வாரியார் சாலை போக்குவரத்தை எங்களையே சரி செய்து தருமாறு கேட்டுக் கொண்டதற்கு நன்றி. எந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்தாலும் அதற்கு மாநகராட்சியே பொறுப்பை ஏற்றுக்கொள்வது போல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு நன்றி. இப்படிக்கு கிருபானந்த வாரியார் சாலை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள்’’ என இருந்தது.

பொதுமக்களுக்கு இனிப்பு

பாஜக மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.எல்.பாபு, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பிச்சாண்டி, மண்டலத் தலைவர் மோகன் உள்ளிட்டோர் அறிவிப்பு பலகைக்கு கற்பூரம் ஏற்றி, தேங் காய் உடைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். எதற்காக இனிப்பு வழங்கப்படுகிறது என விவரம் தெரியாமல் கேட்ட பொது மக்களிடம் கால்வாய் பணிகளை முடிக்காமல் ஆபத்தான நிலையில் மூடாமல் சென்றதற்காக இனிப்பு வழங்குகிறோம் என தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவலறிந்த வேலூர் வடக்கு காவல் துறை யினர் விரைந்து சென்று அறிவிப்பு பலகையை அகற்றுமாறு கூறினர்.

மேலும், கோரிக்கை தொடர்பாக மீண்டும் மாநகராட்சி அதிகாரி களிடம் சென்று முறையிடுமாறு தெரிவித்தனர். இதையடுத்து, கிண்டலடித்து வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை அகற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x