Published : 11 May 2014 12:00 AM
Last Updated : 11 May 2014 12:00 AM

உள்ளுறுப்பு நோயால் கை, கால் செயலிழந்த கோவை சிறுமிக்கு அறுவை சிகிச்சை

பல உள்ளுறுப்பு நோயால் கை, கால் செயலிழந்த கோவை சிறுமிக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மகள் ஜின்சாமோல் (10). சில மாதங்களுக்கு முன்பு பள்ளியில் விளையாடும் போது ஜின்சாமோல் கீழே விழுந்துவிட்டார். இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். காலில் ஏற்பட்ட வீக்கத் துக்காக போட்ட ஊசியால், சிறுமியின் உடல் முழுவதும் கொப்பளம் வந்து விட்டது. கை, கால்கள் கருப்பாக மாறிவிட்டன. கை விரல்கள் அழுகிய நிலையில் இருந்தது.

இதையடுத்து, சிறுமியை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து

விட்டு, மிகவும் அழுகிய நிலையில் இருந்த சிறுமியின் ஆள்காட்டி விரலை அறுவைச் சிகிச்சை மூலம் வெட்டி எடுத்தனர். ஒரு பகுதி கையும், காலும் செயலிழந்த நிலையில் படுத்த

படுக்கையாகிவிட்டார் சிறுமி. ‘இங்கேயே வைத்திருந்தால் உயிருக்கு ஆபத்து. அதனால், சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல் லுங்கள்’ என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் கடந்த பிப்ரவரி மாதம் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், செஞ்சரும பல உள்ளுறுப்பு தாக்க நோயால் (சிஸ்டமிக் லூபஸ் எரித்மடோசஸ்) சிறுமி பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மூட்டு தசை மற்றும் இணைப்புத் திசு நோய்கள் துறை தலைவர் டாக்டர் எஸ்.ராஜேஸ்வரி தலைமையிலான குழுவினர் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சைக்கு பிறகு சிறுமி தற்போது நலமாக இருக்கிறார்.

இதுதொடர்பாக மருத்துவமனை ஆர்எம்ஓக்கள் ஆனந்த் பிரதாப், சுப்புலட்சுமி மற்றும் டாக்டர் ராஜேஸ்வரி ஆகியோர் கூறியதாவது:

செஞ்சரும பல உள்ளுறுப்பு தாக்க நோய் தினத்தை முன்னிட்டு, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுடனான ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நடந்தது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்பட 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கோவையை சேர்ந்த சிறுமி ஜின்சாமோலும் இதில் பங்கேற்றார். இந்தச் சிறுமி, உடல் கருப்பாக மாறி கை, கால் செயலிழந்த நிலையில் வந்தார். பரிசோதனை செய்து பார்த்ததில், சிறுமி இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு சிறுமியின் செயலிழந்த கை, கால் மற்றும் கருப்பாக மாறிய உடலும் நன்றாக மாறிவிட்டது. சிறுமி மீண்டும் பள்ளிக்கு செல்லலாம். ஆனால், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து மருந்துகளையும், சிகிச்சையையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x