

7.5% உள் ஒதுக்கீட்டுக்காக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தனர். ஆளுநருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையும் மறைமுக அழுத்தத்தைக் கொடுத்தது. இதை எல்லாம் மறுத்திட முடியாது. இவர்களுக்கெல்லாம் தமிழக முதல்வர் நன்றி சொல்லாமல் சிறுமைப்படுத்துவது சரியல்ல என்று சமூக சமுத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் விமர்சித்துள்ளது.
இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கி இருப்பது ஒரு வரலாற்றுச் சாதனை. இதன் மூலம் இந்த ஆண்டு மருத்துவம், பல் மருத்துவம் உட்பட மருத்துவப் படிப்புகளில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர முடியும். இது கடந்த 20 ஆண்டுகளில் நடக்காத ஒரு சாதனை. இது பாராட்டுக் குரியது.
அதுமட்டுமன்றி, இந்த 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் மூலம், அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசு ஏற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுக்குரியது.
நீதியரசர் கலையரசன் குழுவின் பரிந்துரைப் படி, 10 விழுக்காட்டை இட ஒதுக்கீடாக வழங்கியிருந்தால், இன்னும் கூடுதலான அரசுப் பள்ளி மாணவர்கள் பயன் பெற்றிருப்பர். அரசு 10 விழுக்காட்டை வழங்காமல் ஏன் 7.5 விழுக்காடாகக் குறைத்தது என்பது புரியாத புதிராக உள்ளது.
இந்நிலையில், ''இந்த இட ஒதுக்கீட்டை வழங்கிடக் கோரி எதிர்க்கட்சித் தலைவரும், எந்த எதிர்க்கட்சியினரும் கோரிக்கை வைக்கவில்லை. பொதுமக்களும் கோரிக்கை வைக்கவில்லை. இதற்கு எப்படித் தீர்வுகாண வேண்டும் என்று நாங்கள் சித்தித்தோம். நான் சிந்தித்தேன். என்னுடைய எண்ணத்தில் உதித்தது. உள் ஒதுக்கீடு 7.5 விழுக்காட்டைக் கொண்டு வந்தோம் '' என முதல்வர், சேலம் மாவட்ட அரசு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
முதல்வரின் சிந்தனையில் இந்த ஒதுக்கீடு தோன்றியது பாராட்டுக்குரியது. ஆனால், வேறு யாருமே இந்தக் கோரிக்கைகையை முன்வைக்கவில்லை என்று கூறியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது இக்கருத்து உண்மைக்கு மாறானது.
• சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரும் கோரிக்கையை 2005 ஆண்டு முதல் வலியுறுத்தி வருகிறது. பல்வேறு கருத்தரங்குகளையும், போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தியுள்ளது. சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், 2006, 2012, 2016 ஆம் ஆண்டுகளில் நடத்திய மாநாடுகளில் இக்கோரிக்கையை, தீர்மானமாக நிறைவேற்றி,அரசு உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து வழங்கியுள்ளது. கோரிக்கை மனுக்களும் பல முறை வழங்கப்பட்டுள்ளன.
• இக்கோரிக்கையை வலியுறுத்தி 12.09.2017 மாலை சென்னையில் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
• மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த ஜே.பி.நட்டாவிடம், இந்த இட ஒதுக்கீட்டை வழங்கிட இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும். அகில இந்தியத் தொகுப்பு இடங்களிலும், மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை மனுவை நேரடியாக வழங்கியது. இதே கோரிக்கையை வலியுறுத்தி தற்போதைய மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனிடமும் கோரிக்கை நேரடியாக வழங்கப்பட்டது.
• 2017 செப்டம்பர் 11 அன்று தமிழ் நாளிதழ் ஒன்றில், எனது கட்டுரையும் வெளிவந்துள்ளது. அதில் அரசுப்பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மருத்துவக் கல்வியில் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தேன். அதுமட்டுமன்றி,
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் மதிப்பெண்ணுடன் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. சில நாளிதழ்களிலும் இக்கோரிக்கை தொடர்பாக எழுதிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
• மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை பிரச்சினை தொடர்பாக நான் எழுதிய மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்போம் என்ற நூலும் 2017-ல் பாவை பிரிண்டர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலில் இந்த இட ஒதுக்கீடு கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.
• இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களிலும், சமூக சமத்துத்திற்கான மருத்துவர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
• தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கமும் இக்கோரிக்கைகளை முன்வைத்து பல போராட்டங்களை நடத்தியுள்ளது. சென்ற ஆண்டு, 10.11.2019 அன்று சென்னையில் நடைபெற்ற அச்சங்கத்தின் மாநாட்டிலும் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று மாலையே பேரணியும் நடத்தப்பட்டது .இம்மாநாட்டில் கலந்து கொண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இக்கோரிக்கைக்கும் ஆதரவு தெரிவித்தனர்.
• பல்வேறு கல்வியாளர்களும் இக்கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.
எனவே,யாருமே இந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை என்று தமிழக முதல்வர் கூறுவது மிகந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது கருத்து உண்மைக்குப் புறம்பானது.
இந்த இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில், அரசுக்கு எவ்வளவு பங்குண்டோ அதே அளவிற்கு எதிர்க்கட்சிகளுக்கும் பங்குண்டு. இந்த இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்தன. அதனால் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது. சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம் செய்வதை எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் கண்டித்துள்ளன. போராட்டங்களும் நடத்தியுள்ளன.
ஆளுநருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையும் மறைமுக அழுத்தத்தைக் கொடுத்தது. இதை எல்லாம் மறப்பதிற்கில்லை, மறுத்திடவும் முடியாது. இவர்களுக்கெல்லாம் தமிழக முதல்வர் நன்றி தெரிவித்திருக்க வேண்டும். அதைவிடுத்து, சிறுமைப்படுத்துவது சரியல்ல. அது ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஏற்றதல்ல.
இருப்பினும், தமிழக அரசின் இந்த இட ஒதுக்கீடு, வரலாற்றுச் சாதனை என்ற அடிப்படையில், தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
• இந்த இட ஒதுக்கீட்டை 10 விழுக்காடாக அதிகரித்து, மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமின்றி இதர தொழிற்கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
• அரசுப் பள்ளிகள் இல்லாத இடங்களில், அரசு உதவி பெறும் பள்ளிகளிலேயே ஏழை எளிய மாணவர்கள் பயில்கின்றனர். எனவே, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கென தனியாக ஒரு குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை மருத்துவக் கல்வியிலும், இதர தொழிற் கல்லூரிகளிலும் வழங்குவது தொடர்பாக தமிழக முதல்வர் சிந்திக்க வேண்டும்.
• அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தையும், அரசு நடத்தும் நீட் பயிற்சி மையங்களின் தரத்தையும் மேம்படுத்த நவடிக்கை எடுக்க வேண்டும்.
• வட்டாரம் தோறும், தங்கும் வசதியுடன் கூடிய இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை ஏழை எளிய மாணவர்களுக்காக அரசு உருவாக்க வேண்டும்.நீட் உட்பட பல்வேறு படிப்புகள் மற்றும், வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கும் அவற்றில் பயிற்சி வழங்க வேண்டும்.
• சிதம்பரம் ராஜா முத்தையா மற்றும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைத்திட வேண்டும்.
• தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தொழிற் கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்விச் செலவுகளை தமிழக அரசே முழுமையாக ஏற்க வேண்டும் என்ற, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் நீண்ட கால கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும். இதற்காக தனியாக ஓர் நிதியத்தை தமிழக அரசு உருவாக்கிட வேண்டும்.
• நீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கு நிரந்தர விலக்கு பெற மத்திய அரசின், தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் -2019ல் தகுந்த திருத்தத்தைக் ( Amendment in National Medical Commision Act -2019 ) கொண்டுவர மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
• தமிழக அரசின் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களில், 100 விழுக்காடு இடங்களுக்கும் மாணவர் சேர்க்கையை தமிழக அரசே நடத்தும் உரிமையை மீட்டெடுக்க வேண்டும். அவ்விடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• மருத்துவக் கல்வியில் அகில இந்தியத் தொகுப்பு முறையை ரத்து செய்திடவும், இட ஒதுக்கீட்டையும், சமூக நீதியையும் காத்திடவும் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
இப்பிரச்சினைகள் குறித்தும் தமிழக முதல்வர், சரியான முடிவுகளை எடுத்து உறுதியுடன் செயல்பட வேண்டும்”.
இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.