

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே முதியவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பதைக் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.
காரைக்குடி அருகே வடகுடி ஊராட்சி மணச்சை கிராமத்தில் 70 வயது முதியவருக்கு 10 நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை.
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை மருத்துவர்கள் பரிசோதித்தில் எலிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மணச்சை கிராமத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்த்ராஜ் தலைமையிலான சுகாதாரத்துறையினர் முகாமிட்டு காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருப்பதிராஜன், ஸ்ரீதர், ஊராட்சித் தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் உள்ளாட்சி அமைப்பினர் தெருக்கள் முழுவதும் குப்பைகளை அகற்றி குளோரின் பவுடரை தெளித்தனர்.
காரைக்குடிப் பகுதியில் கரோனாவை தொடர்ந்து எலிக்காய்ச்சல் பரவி வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.