Published : 20 Nov 2020 05:52 PM
Last Updated : 20 Nov 2020 05:52 PM

இலங்கையில் தீவிரமாகப் பரவும் கரோனா: மருந்துப் பொருட்கள் தட்டுப்பாட்டால் ராமேசுவரத்திலிருந்து கடத்தப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள்

இலங்கையில் கரோனா பரவலினால் ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையைத் தொடர்ந்து ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நோய் எதிர்ப்பு மருந்துகளை கடலோரக் காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகக் கடலோரப் பகுதிகளிலிருந்து குறிப்பாக ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு போதைப் பொருட்கள், பீடி இலைகள், கடல் அட்டை போன்றவற்றை கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இலங்கையில் மஞ்சள் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கரோனா பரவலைத் தடுப்பதற்காக கிருமி நாசினியாக சமையல் மஞ்சள் பயன்பாடு அதிகரித்துள்ளதால் தமிழகத்திலிருந்து கடல் வழியாக மஞ்சள் கடத்துவது சமீபத்தில் அதிகரித்தது. இந்தக் கடத்தல் பொருட்கள் பட்டியலில் தற்போது புதியதாக நோய் எதிர்ப்பு மருந்துகளும் இடம்பிடித்துள்ளது.

இலங்கையில் கரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க 10 டன் மருத்துவப் பொருட்களை அன்பளிப்பாக இந்தியா சமீபத்தில் அனுப்பி வைத்தது.

தற்போது இலங்கையில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்களின் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் கடத்தும் சம்பவங்கள் துவங்கி உள்ளன.



இந்நிலையில் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வடக்கு கடல் பகுதியில் சந்தேகப்படும் நிலையில் மூட்டை ஒன்று மிதப்பதாக இந்திய கடலோரக் காவல் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதிக்கு வந்த கடலோரக் காவல் படையினர் கடலில் மிதந்த மூட்டையை மீட்டு சோதனை செய்தனர். சோதனையின்போது அந்த மூட்டைக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் B1, B6, B12 + Calcium Pantothenate ஊசி மருந்துகள் கொண்ட 6,000 குப்பிகள் இருந்திருக்கின்றன.

முதற்கட்ட விசாரணையில் இந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் அடங்கிய மூட்டையை இலங்கைக்குக் கடத்திச் செல்லப்பட்டபோது கடலில் தவறி விழுந்து மிதந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. மேலும் இதனைக் கடத்தியவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த அக்டோபர் 18 அன்று தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்துகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x