Last Updated : 20 Nov, 2020 05:27 PM

 

Published : 20 Nov 2020 05:27 PM
Last Updated : 20 Nov 2020 05:27 PM

குற்றப்பின்னணி கொண்டவர்கள் கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் நியமனம்?- பட்டியல் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

தமிழகத்தில் கோயில் அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்கான மாவட்டக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் விவரங்கள், தகுதியை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் 42 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்க மாவட்ட அளவில் அறங்காவலர்களைத் தேர்வு செய்யும் குழு அமைக்கப்பட்டுள்ளது

மாவட்ட அளவிலான அறங்காவலர்கள் தேர்வுக் குழு மற்றும் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தேர்வு மற்றும் தகுதி தொடர்பாக அறநிலையத்துறை சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த விதிகளைப் பின்பற்றாமல் அரசியல் பின்னணி கொண்டவர்கள், அமைச்சர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் பரிந்துரைக்கும் நபர்களை அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கின்றனர்.

மாவட்ட அளவிலான அறங்காவலர் தேர்வுக்குழு கிராமக் கோவில் அறங்காவலர்களாக எம்பி, எம்எல்ஏக்கள் பரிந்துரைக்கும் நபர்களையும், அமைச்சர்கள் பரிந்துரைக்கும் நபர்களை மாவட்டத் தலைநகரங்களில் உள்ள கோயில் அறங்காவலர்களாகவும் நியமிக்கின்றனர்.

அரசியல் சார்புடைய அறங்காவலர் குழுவினர் கோயில் நிர்வாக அதிகாரிகளை மிரட்டி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக பொது அறிவிப்பு வெளியிட்டு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் பெற்று நியமிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை சார்பில், தமிழகத்தலில் 26 மாவட்டங்களில் அறங்காவலர் குழு அமைக்க மாவட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள், வழக்குகள் உள்ளவர்கள், அரசியல்வாதிகள் பலர் மாவட்ட அறங்காவலர்கள் தேர்வு குழுக்களில் இடம்பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட அறங்காவலர் தேர்வு குழு உறுப்பினர்களின் பட்டியல், அவர்களின் தகுதிகள் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் தேர்வுக்கான விதிகளை அறநிலையத்துறை ஆணையர் டிச. 4-ல் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x