Last Updated : 20 Nov, 2020 05:16 PM

 

Published : 20 Nov 2020 05:16 PM
Last Updated : 20 Nov 2020 05:16 PM

மார்த்தாண்டம் மோட்டார் வாகன ஆய்வாளரின் காரில் ரூ.1.69 லட்சம் பணம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடவடிக்கை 

நாகர்கோவில்

மார்த்தாண்டம் மோட்டார் வாகன ஆய்வாளரின் காரை நாகர்கோவிலில் தடுத்து நிறுத்தி லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை செய்தபோது, அதில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில் உள்ள மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிக அளவில் லஞ்சப் பணம் கைமாறுவதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்கு தொடர் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவவலகத்தை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுலகத்தில் இருந்து மார்த்தாண்டம் மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாள் நேற்று இரவு திருநெல்வேலிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மதியழகன் தலைமையில் நாகர்கோவில் ஒழுகினசேரியில் மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாளின் காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது காரில் கட்டு கட்டாக பணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பணத்திற்கான ஆவணங்களை கேட்டபோது, பெருமாளிடம் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை இதைத்தொடர்ந்து காரில் இருந்த ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாளை அப்பகுதியில் உள்ள வனத்துறை அலவலகத்தில் வைத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.

அவர் மீது கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்ததாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடமாடிய புரோக்கர்கள் சிலரைப் பிடித்தும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணக்கில் வராத பணம் சிக்கிய விவரகாரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x