

அரசுக் கல்லூரியில் படிக்கும் செவிலியர் படிப்பு படிக்கும் மாணவிக்கு மருத்துவக் கல்வியில் சேருவதற்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஆணையிட்டது. அதன்படி, மருத்துவக் கல்விக்கு 313 பேருக்கும், பல் மருத்துவத்திற்கு 92 பேருக்கும் என 405 மாணவ, மாணவியர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான மருத்துவக் கலந்தாய்வு நவ.18ஆம் தேதி தொடங்கி இன்று (நவ.20) வரை நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதி பெற்ற 30 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களான மேல்மலையனூர் கலைதேவி, விழுப்புரம் காயத்ரி, கலைவாணி, பாதிராப்புலியூர் அன்பரசு, கண்டாச்சிபுரம் துரைமுருகன் ஆகியோர் மருத்துவப் படிப்புக்கும், விழுப்புரம் நஸ்ரின் பேகம், ஹேமலட்சுமி, பாதிராப்புலியூர் முருகன் என இதுவரை 8 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்குக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இவர்களில் மேல்மலையனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த கலைதேவி, சென்னை மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு பி.எஸ்.சி நர்ஸிங் படிக்கும்போதே மருத்துவக் கல்விக்கு தேர்ச்சி பெற்று செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது.
இதுகுறித்து மருத்துவக் கல்விக்குத் தேர்வான கலைதேவியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, "தமிழ் வழியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மானந்தல் அரசு நடுநிலைப் பள்ளியிலும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மேல்மலையனூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படித்து கடந்த ஆண்டு மேல்நிலைத் தேர்வில் 1096 மதிப்பெண் பெற்று, நீட் தேர்வு எழுதினேன். அதில் 356 மதிப்பெண் பெற்றேன். அப்போது மருத்துவக் கல்விக்கு இடம் கிடைக்காததால் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் கிடைத்தது.
அதில் சேர்ந்து படித்துக்கொண்டே கோச்சிங் சென்டர் எதிலும் சேராமல் கல்லூரி விடுதியில் இருந்தபடி படித்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி 431 மதிப்பெண் பெற்றேன். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று (நவ.19) இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த என் தந்தை முருகன் விவசாயி, அம்மா தனலட்சுமி குடும்ப தலைவி, என் தங்கை கலைவாணி 12-ம் வகுப்பு முடித்து, தற்போது காவலர் தேர்வுக்குத் தயாராகிவருகிறார். சகோதரர் திருப்பதி இந்த ஆண்டு 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்" என்றார்.