

‘தி இந்து’ மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்று நடைபெற்ற ‘கார்கள் இல்லாத ஞாயிறு’ விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர்.
பொது இடம் ஒன்றை உருவாக்கும் விதமாக, ‘நம்ம சென்னை நமக்கே’ என்ற கருப்பொருளுடன், ‘தி இந்து’ நாளிதழ், சென்னை மாநகராட்சி, சென்னை மாநகர காவல்துறை, போக்குவரத்து மற்றும் வளர்ச்சிக் கொள்கை நிறுவனம் சார்பில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி சென்னையில் முதன்முறையாக எலியட்ஸ் கடற்கரை சாலையில் ‘கார்கள் இல்லாத ஞாயிறு’ விழா நடைபெற்றது. அதையொட்டி எலியட்ஸ் கடற்கரை சாலையில் காலை 6 முதல் 9 மணி வரை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. இந்த நேரத்தில் பொதுமக்கள் குடும்பத்துடன் சாலையில் விளையாடி மகிழ்ந்தனர்.
அதைத் தொடர்ந்து எலியட்ஸ் கடற்கரை சாலையில் நேற்றும் ‘கார்கள் இல்லாத ஞாயிறு’ விழா நடைபெற்றது. இதில் காலை 6 மணி முதல் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி, நடனத்தின் மூலம் உடற்பயிற்சி, உடற்பயிற்சிகூட கருவிகளைக் கொண்டு உடற்பயிற்சி, ஆப்பிரிக்க ஜூம்பா இசைக் கருவி இசைக்கும் பயிற்சி, குழந்தைகளுக்கு கோட்டோவியங்களை சாலையில் வரையும் பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன.
பின்னர் இசைக் குழுவினரின் நடனம், பம்பரம் விடுதல் மற்றும் கயிறு இழுக்கும் போட்டிகள் நடைபெற்றன. சாலையில் பலர் டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் தனியார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பொதுமக்கள் ஓட்டிப் பழக சைக்கிள்கள் கட்டணமின்றி வழங்கப்பட்டன.
அப்பகுதியில் வசிக்கும் எஸ்.மைத்ரேயி, எம்.மாயா ஆகியோர் இதுபற்றி கூறும்போது, “நாங்கள் இருவரும் இசை பயின்று வருகிறோம். எதேச்சையாகத்தான் இங்கு வந்தோம். விழாவில் நாங்களும் பங்கேற்று சில பாடலை பாடினோம். இந்த விழா எங்களின் இசைத் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது” என்றனர். மேலும் சின்னத்திரையில் பாடிவரும் மது அய்யரும் சில பாடல்களைப் பாடி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார்.
போக்குவரத்து காவல்துறை யின் ஆய்வாளர் து.மயில்சாமி இது பற்றி கூறும்போது, “இவ்விழாவுக் காக கடந்த இரு ஞாயிற்றுக் கிழமைகளாக அதிகாலை 4 மணி முதல் சுமார் 60 போக்குவரத்து போலீஸார் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் எலியட்ஸ் கடற்கரை சாலையில் மோட்டார் வாகனங்கள் செல்லாதவாறு, வேறு வழியில் திருப்பி விட்டும், விழாவில் பங்கேற்க வரும் வாகனங்களை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தவும் உதவி செய்து வருகின்றனர்” என்றார்.