சித்தா, ஹோமியோபதி பட்ட மேற்படிப்பு விண்ணப்பிக்கும் நடைமுறை, இறுதி நாள்: தமிழக அரசு அறிவிப்பு

சித்தா, ஹோமியோபதி பட்ட மேற்படிப்பு விண்ணப்பிக்கும் நடைமுறை, இறுதி நாள்: தமிழக அரசு அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரியில் உள்ள ஹோமியோபதி மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை எவ்வாறு அளிப்பது, இறுதித் தேதி என்ன என்பது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனரகம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“சென்னை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி, 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான மூன்றாண்டு எம்.டி. (சித்தா) பட்ட மேற்படிப்பிற்கு சித்த மருத்துவத்திற்கான AIAPGET 2020 (SIDDHA)-ல் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து இணையவழி மூலமாகப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் அக்.19/2020 அன்று முதல் வரவேற்கப்பட்டன.

மேலும், 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி (மொழி சிறுபான்மையினர் சுயநிதி) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், ஆத்தூரில் உள்ள ஓயிட் மெமோரியல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி (மத சிறுபான்மையினர் சுயநிதி)-ல் அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இருக்கைகளுக்கு, ஹோமியோபதி மருத்துவத்திற்கான AIAPGET-2020-ல் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து இணையவழி மூலமாகப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் அக்.19/2020 அன்று முதல் வரவேற்கப்பட்டன.

விருப்பப் படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை எங்களது அலுவலக வலைதளமான "tnhealth.tn.gov.in”’-லிருந்து பதிவிறக்கம் செய்ய மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப் படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் பெறுவதற்கான கடைசி நாட்கள் முறையே 20-11-2020 மற்றும் நவ.23-லிருந்து நவ.27 முடிய மாலை 5 மணி மற்றும் நவ.30 முடிய மாலை 5.30 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரமான வலைதள அறிவிக்கை, மேற்கண்ட எம்.டி. (ஹோமியோபதி) பட்ட மேற்படிப்பிற்கான சுயநிதி மொழி/ மத சிறுபான்மையினர் மருத்துவக் கல்லூரிகளின் விவரம், மற்றும் எம்.டி.(சித்தா) பட்ட மேற்படிப்பிற்கான அரசு மருத்துவக் கல்லூரிகளின் விவரம், தகவல் தொகுப்பேடு, விருப்பப் படிவத்துடன் கூடிய விண்ணப்பப் பதிவிறக்கம் குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு வழிமுறைகள், படிப்புகளின் விவரம், கல்விக் கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு "www. tnhealth.tn.gov.in" என்ற வலைதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

1. விருப்பப் படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினைப் பதிவிறக்கம் செய்ய கால நீட்டிப்பு செய்யப்பட்ட கடைசி நாள் : 27.11.2020 முடிய மாலை 5 மணி வரை

2. பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப் படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாக பெறவோ, நேரில் சமர்ப்பிக்கவோ நீட்டிப்பு செய்யப்பட்ட கடைசி நாள் 30.11.2020 முடிய மாலை 5.30 மணி வரை”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in