Last Updated : 20 Nov, 2020 02:24 PM

 

Published : 20 Nov 2020 02:24 PM
Last Updated : 20 Nov 2020 02:24 PM

தமிழக அரசின் உள் ஒதுக்கீட்டின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வான 11 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.50,000 நிதி உதவி; அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்

தமிழக அரசின் உள் இட ஒதுக்கீட்டின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வான 11 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நிதி உதவியை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார்.

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் நவ.18-ம் தேதி தொடங்கி இன்று (நவ. 20) வரை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 59 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகள் உட்பட 11 பேருக்கு எம்பிபிஎஸ் இடங்கள் கிடைத்துள்ளன.

இவர்களில், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளான எ.திவ்யா, எம்.பிரசன்னா ஆகியோர் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியையும், எம்.தார்ணிகா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியையும், சி.ஜீவிகா சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியையும் தேர்வு செய்தனர்.

இதேபோன்று, கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.ஹரிகரன், மழையூர் அரசுப் பள்ளி மாணவர் கே.பிரபாகரன், தாந்தாணி அரசுப் பள்ளி மாணவி எம்.கிருஷ்ணவேணி ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியையும், புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எச்.சுகன்யா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியையும், வெட்டன்விடுதி அரசுப் பள்ளி மாணவர் எல்.அகத்தீஸ்வரன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியையும், சிதம்பரவிடுதி அரசுப் பள்ளி மாணவர் டி.கவிவர்மன் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியையும், அரிமளம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.புவனேஸ்வரி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியையும் தேர்வு செய்தனர்.

இம்மாணவ, மாணவிகள் 11 பேரையும் அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று (நவ. 20) வரவழைத்து கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரொக்கம் வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதேபோன்று, ஒரே பள்ளியில் இருந்து 4 மாணவிகளுக்கு சீட் கிடைத்த கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினரைப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x