சூப்பர் மார்க்கெட்களில் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது: தீயணைப்புத் துறை வலியுறுத்தல்

சூப்பர் மார்க்கெட்களில் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது: தீயணைப்புத் துறை வலியுறுத்தல்
Updated on
1 min read

சூப்பர் மார்க்கெட்களில் பட்டாசுகள் விற்கக் கூடாது என்று தீயணைப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பட்டாசுகளின் வியாபாரம் களை கட்ட ஆரம்பித்துள்ளது. சென்னையில் தீவு திடல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பட்டாசு கடைகளுக்கு என தனியாக இடம் ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது சூப்பர் மார்க்கெட்களில் அரிசி, பருப்பு, எண்ணெய் என மளிகை பொருட்களுக்கு அருகில் பட்டாசுகளும் வைக்கப்பட்டு விற்கப்படுகிறது. இது பாதுகாப்பான நடவடிக்கை இல்லை என்பதாலும் விதிமீறிய செயல் என்பதாலும் சூப்பர் மார்க்கெட்களில் பட்டாசு விற்கக் கூடாது என்று பட்டாசு கடைகளுக்கான உரிமங்களை வழங்கும் தீயணைப்புத் துறை அறிவுறுத்தி உள்ளது.

வெடிபொருள் 2008 சட்டத்தின்படி உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு விற்க முடியும். பட்டாசு விற்கும் கடைகள் செங்கல், கற்கள் அல்லது கான்கிரீட் கட்டிடமாக இருக்க வேண்டும். பட்டாசு விற்கும் கடையின் அளவு 9 சதுர மீட்டர் முதல் 25 சதுர மீட்டர் வரை இருக்க வேண்டும். பட்டாசு கடை தரை தளத்தில் இருக்க வேண்டும். மேல் தளத்தில் குடியிருப்புகள் இருக்கும் கட்டிடத்தில் பட்டாசுகள் விற்க முடியாது என்பது போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே பட்டாசு கடைக்கான உரிமம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பட்டாசு கடை உரிமத்துக்காக தீயணைப்பு துறையிடம் இதுவரை பெறப்பட்ட 848 விண்ணப்பங்களில் 199 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

வெடிபொருள் 2008 சட்டத்தின்படி பட்டாசு விற்கப்படும் கடையில் வேறு எந்த பொருளும் விற்கக் கூடாது.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ராஜேஷ் கண்ணா கூறும்போது, “சூப்பர் மார்க்கெட் இயங்கிக் கொண்டிருக்கும் போது பட்டாசு கடை கண்டிப்பாக நடத்த முடியாது. பட்டாசு கடை நடத்த உரிமம் பெற்றிருந்தால் சூப்பர் மார்க்கெட்டை மூடிவிட்டு பட்டாசு கடை நடத்தலாம். இரண்டும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் நடத்த அனுமதி கிடையாது. திண்டுக்கல்லில் ஒரு வளையல் கடையின் முன்பு பட்டாசு கடை நடத்திய போது ஏற்பட்ட விபத்தில் வளையல் கடைக்கு வந்திருந்தவர்களும் உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் நினைவிருக்கும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in