

தேனி மாவட்டம் மேகமலை மலைப் பகுதியில் தொடர் மழை காரணமாக 8-க்கும் மேற்பட்ட இடங்களில் லேசான நிலச்சரிவு ஏற்பட்டது.
சின்னமனூருக்கு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மேகமலை. 18 கொண்டை ஊசி வளைவுகளுடன் பசுமையான சரிவுகளைக் கொண்ட இப்பகுதியில் தேயிலை, காபித் தோட்டங்கள் அதிகம் உள்ளன.
வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டு வனத்துறையினரின் கண்காணிப்பில் இப்பகுதி உள்ளது. யானை, புலி, கரடி நடமாட்டம் இருப்பதால் மலைச்சாலையில் இரவு வாகனங்கள் செல்ல பல ஆண்டுகளாக தடை விதிக்கப்பட் டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இங்குள்ள ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, மகாராஜமெட்டு, இரவங்கலாறு, வண்ணாத்திப் பாறை, மேல்மணலாறு உட்பட பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் இரவு பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. சென்ட்ரல் கேம்ப் என்னும் இடத்தில் மண் சரிந்து சாலையில் விழுந்தது. 8-வது திருப்பத்தில் தடுப்புச் சுவர் உடைந்து பள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. 9-வது கொண்டை ஊசி வளைவில் மரங்கள் சரிந்து சாலையில் விழுந்தன.
வனத் துறை, நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று காலை சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். லேசான மண் சரிவு என்பதால் 2 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருவதை தவிர்க்கும்படி வனத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்